×

வெண்டிபாளையம் ரயில்வே கேட்டில் சப்-வே கட்டுமான பணி மந்தம்

ஈரோடு, பிப்.11: ஈரோடு வெண்டிபாளையம் ரயில்வே கேட்டில் சப்-வே கட்டுமான பணிகள் மந்தமாக நடந்து வருவதால், அப்பகுதி வழியாக வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். ஈரோடு பழைய கரூர் ரோட்டில் வெண்டிபாளையம் செல்லும் வழியில் இரண்டு ரயில்வே கிராசிங்குகள் உள்ளன. இந்த 2 ரயில்வே கிராசிங்குகள் வழியாக, ஈரோட்டில் இருந்து சேலம், சென்னை உள்ளிட்ட பல்வேறு தென் மாவட்டங்களுக்கும், ஈரோடு மார்க்கமாக பல்வேறு மாநிலத்தில் இருந்து கோவை மற்றும் கேரளா செல்ல 60க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன. இந்த ரயில்வே கேட்களின் இடைப்பட்ட பகுதியில்தான் வெண்டிபாளையம், மோளகவுண்டன்பாளையம், லோகநாதபுரம் உள்ளிட்ட ஊர்கள் உள்ளன. ரயில்கள் இந்த ரயில்வே கிராசிங்குகள் வழியாக செல்லும்போது ரயில்வே கேட் பூட்டப்படும். ஒவ்வொரு ரயிலும் கேட்டை கடக்கும் வரை சுமார் 15 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை போக்குவரத்து நிறுத்தப்படுகிறது.

இதனால் அப்பகுதி மக்கள், ரயில்வே கேட்டுகளை கடந்து செல்லும் வகையில் மேம்பாலம் அல்லது சப்-வே அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். இதை ஏற்று ரயில்வே நிர்வாகம் வெண்டிபாளையம் 2வது ரயில்வே கேட்டில் சப்-வே கட்ட நிதி ஒதுக்கீடு செய்தது. இதற்கான கட்டுமான பணிகள் கடந்த அக்டோபர் மாதம் துவங்கியது. இப் பணி காரணமாக அப்பகுதியில் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டு, மோளகவுண்டன்பாளையம் வழியாகவும், கரூர் ரோடு வழியாகவும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகள் கடந்த 5 மாதத்தை கடந்து மந்தமாக நடந்து வருவதால் அப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, ரயில்வே நிர்வாகம் சப்வே கட்டுமான பணியினை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Vendipalayam ,
× RELATED வெண்டிபாளையம் குப்பைக்கிடங்கில் தீ: மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு