×

பவானிசாகர் அணை நீர்மட்டம் 112 நாட்களாக 100 அடிக்கு மேல் நீடிக்கிறது

சத்தியமங்கலம், பிப்.11:  பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 112 நாட்களாக 100 அடிக்கு மேல் நீடித்து வருகிறது. தமிழகத்தில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள பவானிசாகர் அணை இரண்டாவது பெரிய அணையாக உள்ளது. அணையின் மொத்த உயரம் 105 அடி. மொத்த கொள்ளளவு 32.8 டிஎம்சி. பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறுகிறது. இதேபோல், பவானி ஆற்றில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் தடப்பள்ளி அரக்கன்கோட்டை மற்றும் காலிங்கராயன் பாசன பகுதியைச் சேர்ந்த சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதுதவிர, பவானிசாகர் அணையின் மூலம் புன்செய் புளியம்பட்டி, சத்தியமங்கலம், கோபி, பவானி உள்ளிட்ட நகராட்சிகளும், 50க்கும் மேற்பட்ட பேரூராட்சிகளிலும், நூற்றுக்கும் மேற்பட்ட ஊராட்சிகளும் குடிநீர் வசதி பெறுவது குறிப்பிடத்தக்கது.

கடந்த காலங்களில் பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப் பகுதியில் போதிய மழை இல்லாத காரணத்தால் அணைக்கு வரும் தண்ணீர் குறைவாக இருந்தது. இதனால், அணையின் நீர்மட்டம் 60 முதல் 80 அடி வரை மட்டுமே வந்தது. கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பவானிசாகர் அணையின் நீர்தேக்க பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து நீர்மட்டம் 100 அடியை தொட்டது.
இதனால், அணையில் இருந்து மேல் மதகு மூலம் உபரிநீர் திறக்கப்பட்டது. இதையடுத்து, அணைக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்தாலும் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுவதால் நீர்மட்டம் மீண்டும் குறைய துவங்கியது. கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் மீண்டும் பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்ய துவங்கியதால் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால், அணையின் நீர்மட்டம் மீண்டும் 100 அடியை தொட்டது. அதன்பின், தொடர்ந்து அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்ததால் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து 48 ஆண்டுகளுக்கு பிறகு கடந்தாண்டு நவம்பர் மாதம் 8ம் தேதி மீண்டும் அணையின் முழு கொள்ளளவான 105 அடியை தொட்டது. தற்போது, பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பவானி ஆற்றில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் அணையின் நீர்மட்டம் 105 அடியில் இருந்து படிப்படியாக குறைந்து வந்தாலும் 100 அடியை கடந்தே உள்ளது. தொடர்ந்து 112 நாட்களாக பவானிசாகர் அணை நீர்மட்டம் 100 அடியாக நீடிப்பது இதுவே முதல்முறை ஆகும்.

Tags : watershed ,Bawanisagar Dam ,
× RELATED கோவையில் நடைபெறும் திறன் மேம்பாட்டு...