×

தீவிரவாத தாக்குதலில் உயிர்நீத்த குமரி சி.ஆர்.பி.எப். வீரர்களின் குடும்பத்தினருடன் டி.ஐ.ஜி. சந்திப்பு

நாகர்கோவில், பிப்.11 : தீவிரவாதிகள் தாக்குதலில் உயிர் தியாகம் செய்த சிஆர்பிஎப் வீரர்களின் வீடுகளுக்கு டி.ஐ.ஜி. சென்று ஆறுதல் கூறினார். அரசின் நிதி உதவிகள் முழுமையாக கிடைத்து உள்ளதா? என்பதை கேட்டறிந்தார். இந்தியாவில் உள்ள துணை ராணுவப்படையில் மிகவும் முக்கியமான படையாக மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎப்) கருதப்படுகிறது. இப்படையினர் உள்நாட்டு அமைதியை நிலை நாட்டுவதில் முக்கிய பங்காற்றி வருகிறார்கள். குறிப்பாக தீவிரவாதம், நக்சலைட்டுகளை ஒழிப்பதில் இப்படை பிரிவினர் ஈடுபட்டு வருகிறார்கள்.  இவ்வாறு இந்த படை பிரிவில் பணியாற்றி நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த வீரர்களை போற்றும் வகையிலும், அவர்களின் குடும்பங்களை நன்கு கவனித்து தேவையான உதவிகளை செய்யும் வகையிலும், சிஆர்பிஎப் படை (ஆவடி படை பிரிவு) டி.ஐ.ஜி. சோனல் வி. மிஸ்ரா, நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். இந்த நடவடிக்கையின் ஒரு கட்டமாக அவர் நேற்று குமரி மாவட்டம் வந்தார்.

குமரி மாவட்டத்தில் இருந்து இப்படை பிரிவில் பணியாற்றி கடந்த 11.11.2013 அன்று சட்டீஸ்கர் மாநிலம் தாண்டோவா மாவட்டத்தில் நடைபெற்ற மாவோயிஸ்ட்டுக்கு எதிரான தாக்குதலில் உயிர்நீத்த கருங்கல் கம்பிளார் பகுதியை சேர்ந்த சிஆர்பிஎப் படை வீரர் கிளைமண்ட் ஜோசப், கடந்த 29.9.2009 காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் உயிர் தியாகம் செய்த கருங்கல் பாத்திரவிளையை சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் பிரதாப் சிங் மற்றும் கடந்த 14.3.2010 அன்று காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளுக்கு எதிரான போரின் போது உயிர் தியாகம் செய்த இரணியல் பள்ளிச்சன்விளை பகுதியை சேர்ந்த சிஆர்பிஎப் படை வீரர் மோகன்லால்  ஆகியோரின் உயிர் தியாகத்துக்கு மரியாதை அளிக்கும் விதமாக  நேற்று மாலை அவர்களின் வீடுகளுக்கு டி.ஐ.ஜி. சோனல் வி. மிஸ்ரா சென்றார்.

வீரர்களின் குடும்பத்தினரை சந்தித்து பேசிய அவர், அந்த குடும்பத்தினருக்கு குறைகள் எதுவும் உள்ளதா? அரசிடம் இருந்து கிடைக்க வேண்டிய நிவாரண நிதி மற்றும் உதவிகள் அனைத்தும் முழுமையாக கிடைத்துள்ளதா? என்பது பற்றி கேட்டறிந்தார். இந்த சந்திப்பின் போது, பத்மநாபபுரம் சார் ஆட்சியர் சரண்யா அரி, குளச்சல் ஏ.எஸ்.பி. விஸ்வேஸ் சாஸ்திரி ஆகியோர் உடன் இருந்தனர்.  ஏற்கனவே உயிர் நீத்த வீரர் கிளைமண்ட் ஜோசப்புக்கு, குடியரசு தலைவர் விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும் வீரர்களின் உயிர் தியாகத்தை பறைசாற்றும் வகையில் அவர்கள் பயின்ற பள்ளிகளில் பெயர் பலகையும் வைக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Kumari CRPF ,Meeting ,veterans ,
× RELATED ஏஐடியூசி போக்குவரத்து சம்மேளன குழு கூட்டம்