×

சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட செய்யது அலி உபா சட்டத்தில் கைது

நாகர்கோவில், பிப்.11: திருவனந்தபுரத்தில் பிடிபட்ட செய்யது அலியை நாகர்கோவிலில் இருந்து தென்காசி போலீசார் நேற்று உபா சடடத்தில் கைது செய்து அழைத்து சென்றனர். குமரி மாவட்டம் களியக்காவிளை போலீஸ் சோதனை சாவடியில் பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் (57) கடந்த ஜனவரி 8ம் தேதி துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக திருவிதாங்கோட்டை சேர்ந்த அப்துல் சமீம், தவுபிக் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களை 10 நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். இந்தநிலையில் வழக்கில் தொடர்புடையதாக முக்கிய குற்றவாளியான கம்ப்யூட்டர் இன்ஜினியர் செய்யது அலியை திருவனந்தபுரம் அருகே பிடித்தனர்.

பின்னர் அவரை நாகர்கோவில் நேசமணிநகர் காவல்நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் அவருக்கு ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இது தவிர தீவிரவாத செயலுக்காகவும், அவர்களை தொடர்பு கொள்ள வசதியாகவும் தனியாக சாப்ட்வேர் தயாரிப்பிலும் பங்காற்றி உள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர். இவர் மீது தென்காசி காவல் நிலையத்திலும் வழக்கு நிலுவையில் இருந்தது. இந்தநிலையில் நேற்று காலை தென்காசி இன்ஸ்பெக்டர் ஆடிவேல் தலைமையில் வந்த போலீசார் நாகர்கோவில் வந்து நேசமணிநகர் காவல் நிலையத்தில் இருந்து செய்யது அலியை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தென்காசிக்கு அழைத்து சென்றனர்.

இது தொடர்பாக போலீசார் கூறுகையில், ‘இந்திய இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக உள்ள சட்டவிரோத செயல்களில் செய்யது அலி ஈடுபட்டு வந்துள்ளார். செய்யது அலியும், அவரது கூட்டாளிகளும் காயல்பட்டினம், தென்காசி, பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் இதற்காக ஆலோசனை கூட்டங்கள் நடத்தியுள்ளனர். இது தொடர்பாக தென்காசி போலீசார் வழக்குபதிவு செய்திருந்த நிலையில் தென்காசியை சேர்ந்த ஒருவர் மட்டும் கைது செய்யப்பட்டார். 5 பேர் பெயர்கள் குறிப்பிடப்பட்டு மொத்தம் 13 பேர் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டிருந்தனர். இவர்கள் மீது சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் (உபா) கீழும் ஏற்கனவே வழக்குபதிவு செய்யப்பட்டிருந்தது.  பிடிபட்டவரிடம் நடத்திய விசாரணையில் இந்த வழக்கில் செய்யது அலிக்கும் தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரை தென்காசி போலீசார் நேற்று கைது செய்தனர்.

Tags : Ali Uppa ,
× RELATED வேளாண் சார்ந்த பணிகளை மேற்கொள்ள எந்த...