×

பேஸ்புக் நண்பர் குடும்ப திருமணத்திற்கு சென்றவர்கள் மனைவி கண் முன் ஆட்டோ டிரைவர், 2 மகன்கள் பலியானது எப்படி?

நாகர்கோவில், பிப்.11: கேரள மாநிலம் கொல்லத்தில் குமரி மாவட்டத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர், இரண்டு மகன்கள் பலியானது தொடர்பாக உருக்கமான தகவல்கள் வெளிவந்துள்ளன. நாகர்கோவில், கோட்டார், கரியமாணிக்கத்து ஆழ்வார்கோயில் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ்(49). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சுப்புலட்சுமி (45). இவர்களது மகன்கள் சுந்தர் எஸ்.ராஜ் என்ற சரவணன்(20), சவுந்தர் எஸ்.ராஜ் என்ற விக்னேஷ்(17). கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே உள்ள பரவூர் பகுதியை சேர்ந்த செல்வராஜ் குடும்பத்தினர் நாகர்கோவில் கரியமாணிக்கத்து ஆழ்வார்கோயில் பகுதியில் வசித்து வந்தனர். மூத்த மகன் சுந்தர் எஸ்.ராஜ் என்ற சரவணன் பி.காம் படித்துவிட்டு வங்கி ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். இளைய மகன் சவுந்தர் எஸ்.ராஜ் என்ற விக்னேஷ் நாகர்கோவில் எஸ்.எல்.பி பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார். செல்வராஜ் மற்றும் சுந்தர் எஸ்.ராஜ், சவுந்தர் எஸ்.ராஜ் ஆகியோர் நேற்று முன்தினம் மாலையில் கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் உள்ள கோயில் குளத்தில் மூழ்கி பலியாகினர். இது தொடர்பாக பல்வேறு உருக்கமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

பேஸ்புக் வழியாக கிடைத்த நட்பின் அடிப்படையில் நண்பர் குடும்பத்தினரின் கொல்லம் சிதறையில் உள்ள வீட்டில் இன்று நடைபெறும் திருமணத்திற்காக செல்வராஜ் குடும்பத்தினர் ஒரு நாள் முன்பே புறப்பட்டு சென்றுள்ளனர். அங்குள்ள ஆல்த்தறை மூடு என்ற பகுதியில் உள்ள நண்பர் வீட்டில் தங்கியுள்ளனர். பின்னர் அங்கிருந்தவர்களின் குழந்தைகளுடன் மாலையில் அங்குள்ள தேவி கோயில் தரிசனத்திற்கு சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த தெப்ப குளத்திற்கு அருகே சென்றனர். செல்வராஜின் மனைவி சுப்புலட்சுமியும், உறவினர்களும் குளத்தின் மேற்கு கரையில் நின்றுகொண்டு குளத்தில் மீன்களுக்கு இரை போட்டுக்கொண்டு இருந்தனர். அப்போது கிழக்கு கரையில் செல்வராஜ் மற்றும் மகன்கள் குளத்தில் குளிப்பதற்கு இறங்கினர். அவர்கள் அங்கு குளித்து கொண்டிருந்தனர். ஆனால் அவர்கள் கரை திரும்பவில்லை. நீண்ட நேரமாக அவர்களை அங்கு காணாததால் சுப்புலட்சுமியும், உறவினர்களும் கூச்சல் போட்டனர். இதனை கேட்டு அங்கு அந்த பகுதி பொதுமக்கள் திரண்டனர்.

பின்னர் தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு துறையினர் அந்த பகுதிக்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் குளத்தில் இறங்கி தேடுதலில் ஈடுபட்டனர். அப்போது சுந்தர் எஸ்.ராஜ் முதலில் மீட்கப்பட்டார். அவரை அங்குள்ள தாலுகா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது அவர் இறந்திருந்தார். தொடர்ந்து நடத்திய தேடுதலில் செல்வராஜ் மற்றும் சவுந்தர் எஸ்.ராஜ் ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டன. அவரது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது.

Tags : Weddings ,Friend Family ,Sons ,Eye Auto Driver ,
× RELATED ஆர்.எஸ்.மங்கலம் அருகே கண்மாயில் மூழ்கி சிறுவன் பலி