×

ராஜாக்கமங்கலம் அருகே அம்மன் கோயிலில் மீண்டும் நகைகள் கொள்ளை கொள்ளையர் வந்த பைக்கை கைப்பற்றி போலீசார் விசாரணை

நாகர்கோவில், பிப்.11: சூரப்பள்ளம் மஞ்சாடி அம்மன் கோயிலில் இரண்டாவது முறையாக நடந்த கொள்ளை தொடர்பாக கொள்ளையர் வந்த பைக்கை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜாக்கமங்கலம் அருகே சூரப்பள்ளத்தில் மஞ்சாடி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் கும்பாபிஷேகம் முடிந்து ஓராண்டு ஆகிய நிலையில் வருஷாபிஷேக விழா கடந்த பிப்ரவரி 7, 8 தேதிகளில் நடந்தது. 8ம் தேதி இரவில் கோயிலில் நடையை அடைத்துவிட்டு பூசாரி சென்றுள்ளார். கோயிலில் அம்மனுக்கு காணிக்கையாக வழங்கியிருந்த தாலி, நெற்றிச்சுட்டி செயின், காப்பு உள்ளிட்ட நகைகள் அம்மனுக்கு அணிவித்திருந்த நிலையில் இருந்தது. இந்த நிலையில் 9ம் தேதி அதிகாலை சுமார் 4.15 மணியளவில் கோயில் அருகே பைக்கில் சென்றவர்கள் கோயிலுக்குள் ஆட்கள் நடமாட்டம் இருப்பதை கண்டனர். அப்போது கோயிலுக்குள் சென்று பார்த்தபோது அங்கிருந்து 3 பேர் தப்பி ஓட்டம் பிடித்துள்ளனர். அவர்கள் வந்த பைக் ஒன்றை அங்கேயே போட்டுவிட்டு சென்றுள்ளனர். பின்னர் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்து கோயிலுக்குள் சென்று பார்த்தபோது கோயிலில் இருந்த மடப்பள்ளி அறை பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.

ஆனால் மூலஸ்தான அறையில் பூட்டு உடைக்கப்படவில்லை. அதற்கான சாவியும் மடப்பள்ளியில் இருந்தது. இது தொடர்பாக ராஜாக்கமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வந்து விசாரணை நடத்தினர். அப்போது மடப்பள்ளியில் பூட்டு உடைக்கப்பட்டுள்ளது. மூலஸ்தான சாவியும் மடப்பள்ளியில் இருந்தது. எனவே கோயிலில் திருட்டு ஏதும் போகவில்லை என்று நிர்வாக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் மாலையில் 4 மணிக்கு வழக்கமான பூஜைகளுக்காக மூலஸ்தான நடை திறக்கப்பட்டபோது கோயிலில் அம்மனுக்கு அணிவித்திருந்த 8 கிராம் காப்பு 1, 4 கிராம் நெற்றிச்சுட்டி 1, ஒரு கிராம் மற்றும் இரண்டு கிராம் எடையுள்ள 2 தாலிகள் ஆகியன கொள்ளை போனது தெரியவந்தது. இதன் மதிப்பு மொத்தம் ரூ.35 ஆயிரம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

கோயில் மூலஸ்தானம் மூடப்பட்டிருந்த நிலையில் உள்ளே இருந்த நகைகள் எவ்வாறு திருட்டு போனது என போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. கொள்ளையர்கள் மூலஸ்தான சாவியை மடப்பள்ளியில் இருந்து எடுத்து சென்று நகைகளை திருடிவிட்டு பின்னர் சாவியை மடப்பள்ளியில் மீண்டும் கொண்டு வைத்தார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக ஊர் தலைவர் கிருஷ்ணபிள்ளை (72) ராஜாக்கமங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சிறப்பு சப் -இன்ஸ்பெக்டர் பிரான்சிஸ் வழக்குபதிவு செய்துள்ளார். சப் இன்ஸ்பெக்டர் அஜ்மல் ஷெரிப் விசாரணை நடத்தி வருகிறார். கொள்ளையர்கள் விட்டு சென்ற பைக்கில் மூன்று நம்பர் பிளேட்டுகள் இருந்தன. அதில் ஒரு நம்பர் பிளேட் சரல் பகுதியை சேர்ந்த ஒருவரது முகவரியை காண்பித்துள்ளது. இது திருட்டு பைக் ஆக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதம் இதே கோயிலில் மடப்பள்ளி பூட்டை உடைத்து அதில் இருந்த சுமார் 15 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. அப்போது மோப்பநாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வருகை தந்து விசாரணை நடத்தியிருந்தனர். கைரேகைகளும் சிக்கியதாக கூறப்பட்டது.

ஆனால் அதில் கொள்ளையர்கள் யாரும் பிடிபடவில்லை, திருட்டு போன நகைகளும் மீட்கப்படவில்லை. அதே கொள்ளையில் ஈடுபட்ட ஆசாமிகள்தான் இதில் ஈடுபட்டார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் கோயிலில் பூஜைகளுக்காக நகைகள் வைக்கப்பட்டிருப்பதை அறிந்தே கொள்ளை நடந்திருப்பதால் இதில் உள்ளூர் ஆசாமிகளுக்கு தொடர்பு உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : robbery ,jewelery bandit ,Rajakkamangalam ,temple ,Amman ,
× RELATED பெரம்பலூர் மாவட்டத்தில் 6 வழிப்பறி...