×

சிற்பங்கள் உடைந்தும் கண்டுகொள்ளாத மாநகராட்சி பராமரிப்பின்றி சீரழியும் முக்கடல் பூங்கா

நாகர்கோவில், பிப்.11:  திறக்கப்பட்டு ஓராண்டு ஆகியுள்ள நிலையில் முக்கடல் அணை பூங்கா பராமரிப்பின்றி போடப்பட்டுள்ளதால் சிற்பங்கள் உடைந்து சீரழிய தொடங்கியுள்ளது. நாகர்கோவில் மாகராட்சிக்கு உட்பட்ட முக்கடல் அணையை அழகுபடுத்தவும், இங்கு சுற்றுலா பயணிகளை  கவர்வதற்கும் நகராட்சி முடிவு செய்து அங்கு சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது. பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் சிறுவர் பூங்கா தேவையில்லாத ஒன்று என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்த போதிலும் எந்தவித கருத்து கேட்பும் இன்றி மத்திய அரசின் அம்ரூத் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக முக்கடல் அணையின் முன் பகுதியில் 12 ஆயிரத்து 600 சதுர மீட்டர் பரப்பில் 2 சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது. மொத்தம் ரூ.1 கோடியில் அமைந்துள்ள இந்த பூங்காவில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் மேலும் ஒரு பூங்கா அமைக்க முடிவுசெய்யப்பட்டது. அதற்காக அம்ரூத் திட்டத்தில் மேலும் ரூ.96 லட்சத்து 80 ஆயிரம் செலவில் 3வது அபிவிருத்தி சிறுவர் பூங்கா 12 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது. மொத்தம் மத்திய அரசின் அம்ரூத் திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 96 லட்சத்து 80 ஆயிரம் செலவில் 3 சிறுவர் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்கா மொத்தம் 24 ஆயிரத்து 600 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் முக்கடல் அணை பூங்கா பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவிடப்பட்டிருந்தது.

முதலில் இலவசமாக அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அப்போது குறைந்த எண்ணிக்கையிலானவர்கள் இந்த அணை மற்றும் பூங்காவை பார்வையிட்டு சென்றிருந்தனர். பின்னர் மாநகராட்சி சார்பில் பெரியவர்களுக்கு ரூ.5ம், சிறியவர்களுக்கு ரூ.2ம் நுழைவு கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. அதே வேளையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் இருந்து சுற்றுலாவாக வரும் மாணவர்களுக்கு கட்டணம் கிடையாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
பொதுவாக ஒதுக்குப்புறமான இடத்தில் அமையப்பெற்றுள்ள இந்த பூங்காக்கள் திறக்கப்பட்ட ஓராண்டிலேயே பராமரிப்பு அற்ற நிலைக்கு சென்றுவிட்டன. மேலும் அதில் அமைக்கப்பட்ட சிற்பங்கள் பலவும் நுழைவு வாயில் பகுதியிலும், பூங்காவிற்கு உட்புற பகுதியிலும் உடைந்து தொங்குகின்றன. இதில் தரமற்ற முறையில் பணிகள் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மாடு, மான், அன்னம், புலி என பல சிற்பங்களும் உடைந்து அவற்றின் கம்பிகள் வெளியே தெரிகின்றன. அவற்றில் உள்ள அலங்கார புற்கள் வெட்டப்படாமலும், சருகுகள் அகற்றப்படாமலும் காட்சியளிக்கின்றன. எப்போதேனும் சுற்றுலா பயணிகள் இங்கு செல்வதுண்டு. அடர்ந்த காட்டுப்பகுதியையொட்டி இருப்பதால் அவர்களும் பீதியில் உடனே திரும்பிவிடுவதும் வழக்கமாக இருந்து வருகிறது. இதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் பூங்கா திட்டத்தின் பெயரில் வீணடிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் பெருமளவு முறைகேடுகள் நடந்திருக்கலாம் என்றும், இது தொடர்பாக அரசு முறையாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : corporation ,
× RELATED ஈரோடு மாநகராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை