×

வலங்கைமான் பகுதியில் அறுவடை பணிகள் தீவிரம் மழையால் நெற்கதிர்கள் சாய்ந்ததால் நேரம் வீண்

வலங்கைமான், பிப். 7: வலங்கைமான் உள்ளிட்ட டெல்டா பகுதிகளில் தற்போது அறுவடைப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த மழையால் நெற்கதிர்கள் சாய்ந்ததால் நெல் அறுவடைக்கான நேரம் இரட்டிப்பாக ஆவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக தென்மேற்கு பருவமழை குறைவின் காரணமாக உரிய நீர் வராததால் டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்கு மேட்டூர் அணை கால தாமதமாக திறக்கப்பட்டது. பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டும் வாய்க்கால் முறையாக தூர்வாரப்படாததால் வாய்க்கால்களில் போதிய தண்ணீர் வரவில்லை. அதனையடுத்து டெல்டா விவசாயிகள் வடகிழக்கு பருவமைழையின் உதவியோடு ஒருபோக சம்பா சாகுபடியை கடந்த சில ஆண்டுகளாக மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை அதிக அளவில் பெய்ததை அடுத்து மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டியது. அதனையடுத்து டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்கு மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இதனையடுத்து நடப்பு பருவத்தில் வலங்கைமான் தாலுகாவில் சம்பா பத்தாயிரத்து 535 ஹெக்டேரிலும், தாளடி நான்காயிரத்து 48 ஹெக்டேரிலும் இயந்திர நடவு, கை நடவு மற்றும் நேரடி விதைப்பு ஆகியவை மூலம் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. இதில் நான்காயிரத்து 43 ஹெக்டேரில் நேரடி விதைப்பு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்டா பகுதிகளில் கடந்த ஆண்டைவிட ஒப்பிடுகையில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அதிக அளவில் பெய்துள்ளது. அதன் காரணமாக பயிர்கள் நன்கு வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த மழையின் போதே சில இடங்களில் நன்கு வளர்ந்து இருந்த சம்பா பயிர்கள் சாயத் தொடங்கியது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகாவில் சம்பா அறுவடை பொங்கல் பண்டிகைக்கு பிறகு துவங்கி அம்மாத இறுதிக்குள் சுமார் நாற்பது சதவீதம் அறுவடை முடிந்து விட்டது. மேலும் இம்மாதம் 15 தினங்களுக்குள் 70 சதவீதமும் இறுதிக்குள் சம்பா மற்றும் தாளடி அறுவடைபணிகள் முடிவுறும் நிலை ஏற்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் வேளாண்மை பொறியியல் துறையில் ஒற்றை இலக்கிலேயே அறுவடை இயந்திரங்கள் உள்ளன. இதன் காரணமக விவசாயிகள் கூடுதல் தொகை கொடுத்து தனியாருக்கு சொந்தமான அறுவடை இயந்திரங்களை பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை உள்ளது. மேலும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பருவமழையின் காரணமாக நெல்சாகுபடி வழக்கத்தைவிட கூடுதலாக சாகுபடி செய்யப்பட்டுள்ளதால் போதிய அறுவடை இயந்திரங்கள் திருவாரூர் மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வரவில்லை. அதன் காரணமாக அறுவடை பணிகளை குறித்த நேரத்தில் செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் வலங்கைமான் மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் பெய்த மழையால் நெற்பயிர்கள் சாய்ந்தன. அதன் காரணமாக ஒரு ஏக்கர் நெல் அறுவடை செய்ய சராசரியாக ஒரு மணிநேரம் ஆகும் நிலையில் தற்போது இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஆகின்றது. இதனால் விவசாயிகளுக்கு நெல் அறுவடையில் ஆகும் செலவு இரட்டிப்பாக ஆகின்றது.
மேலும் பல இடங்களில் சம்பா மற்றும் தாளடி பயிர்களில் நெல்பழம் எனும் பூஞ்சை நோய் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளது. அதனால் விவசாயிகளுக்கு பெரும் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக அறுவடை செய்யப்ட்ட நெல் விற்பனை செய்யப்படுவதற்கு முன் வைக்கோல் விற்பனை செய்யப்படும். வைக்கோல் கட்டு ஒன்று ரூபாய் நூறு முதல் நூற்றி ஐம்பது வரை விற்கப்பட்டது. அதனால் விவசாயிகள் நெல் அறுவடைக்கான செலவிட்டு தொகையை வைக்கோல் விற்பனை மூலம் கிடைத்தது. ஆனால் இந்த ஆண்டு வைக்கோல் விற்பனை படுமோசமாக உள்ளது. வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழையால் சாகுபடி பணிகளை மகிழ்ச்சியுடன் துவங்கிய விவசாயிகள் அறுவடை இயந்திரம் தட்டுப்பாடு, அறுவடை நேரம் அதிகரிப்பு மற்றும் அறுவடைக்கான கூலி உயர்வு, பூஞ்சைநோயால் மகசூல் இழப்பு, வைக்கோல் விற்பனை மந்தம் ஆகிய காரணத்தால் டெல்டா விவசாயிகள் நெல் அறுவடை நேரத்தில் கவலை அடைந்துள்ளனர்.

Tags : area ,Valangaiman ,
× RELATED ஆதிச்சமங்களம் ஊராட்சியில் புதிய மின்மாற்றி அமைப்பு