×

இயந்திரம் மூலம் நெல்அறுவடை மாசிமக விழா துவங்குவதையொட்டி கும்பகோணம் நகரில் சாலைகளை விரைந்து சீரமைக்க வேண்டும்

கும்பகோணம், பிப்.7: கும்பகோணத்தில் வருகிற மாசி மாதம் மாசி மக விழா நடைபெறுவதை முன்னிட்டு, பகுதிகளில் உள்ள சாலைகள், பாதாள சாக்கடை மேன்ஹோல்களை உடனடியாக சீர் செய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாசி மாதம் வருவது மாசி மகாமகம் நடைபெறும். மாசி மகத்தையொட்டி கும்பகோணத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடி, புனித நீராடுவார்கள்.
இதேபோல் வருடந்தோறும் மாசிமக விழாவின்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடுவார்கள். பக்தர்கள் அதிகாலையில் மகாமககுளத்தில் புனித நீராடி விட்டு, பின்னர் பொற்றாமரை குளத்திலும், காமாட்சிஜோசியர் தெருவிலுள்ள காவிரியாற்றின் சக்கரபடித்துறையில் நீராடி விட்டு, தொடர்ந்து அருகிலுள்ள சிவன், பெருமாள் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்து, வீட்டிற்கு செல்வார்கள். மேலும் மாசி மகத்திற்கு தொடர்புடைய 12 சிவன் கோயில்களிலும், 5 பெருமாள் கோயில்களிலும் சுவாமி அம்பாள் புறப்பாடு, பெருமாள் சுவாமி தாயார் புறப்பாடு உள்ளிட்ட பல்வேறு விழாக்கள் நிகழ்ச்சிகள் நடைபெறும். இதனால் கும்பகோணம் நகர் பகுதிகளில் அதிகாலை முதல் இரவு வரை பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
கும்பகோணம் நகராட்சி பகுதியில் பல கோடி ரூபாய் மதிப்பில் ஆம்ரூட் திட்டத்தின்கீழ், புதிய குடிநீர் குழாய் பதிப்பதற்காக அனைத்து சாலைகளையும், ராட்ஷத இயந்திரத்தால் தோண்டி, குழாய்கள் பதிக்கப்பட்டு, சரிவர மூடாமல் அப்படியே விட்டு சென்று விட்டனர்.

இதேபோல் பாதாள சாக்கடை மேன்ஹோல்கள் உடைந்தும், குழாய்கள் அடைத்து கொண்டதால், பெரும்பாலான சாலைகளில் மேன்ஹோலிலிருந்து கழிவுநீர் ஓடுகிறது. இதுகுறித்து பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் புகாரளித்தும், மனு அளித்தும், அனைத்து கட்சியினரும் போராட்டம் செய்தும், கண்டு கொள்வதாக தெரியவில்லை. தற்போது மாசி மக விழாவின்போது, சிவன் மற்றும் பெருமாள் கோயில்களின் தேரோட்டம் நடைபெறும். அப்போது குண்டும், குழியுமாக இருக்கும் சாலைகளில் செல்லும்போது, குழாய் பதிப்பதற்காக தோண்டிய பள்ளத்தில் தேர் சக்கரம் இறங்கினால், தேரின் நிலை கேள்விக் குறியாகி, தேரோட்டத்திற்கு வந்துள்ள ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு பெரும் பிரச்னையாகி விடும்.

எனவே தேரோட்டம் செல்லும் தெருக்களில் உள்ள பொதுமக்கள் மற்றும் பக்தர்கள், அப்பகுதியிலுள்ள அனைவரிடமும் கையெழுத்து பெற்று, நகராட்சி ஆணையரிடம் வழங்கி, சாலைகள் மற்றும் மேன்ஹோல்களை சீர் செய்யவேண்டும் என வலியுறுத்த உள்ளதாகவும், மாவட்ட நிர்வாகம் மாசி மக விழாவிற்குள், தேரோடும் சாலைகளை சீர் செய்யாவிட்டால், சுவாமி, அம்பாள், பெருமாள், தாயார் போல் வேடமிட்டு, சிறிய அளவில் தேர் வடிவமைத்து, எங்களுக்கு பாதை கொடுங்கள் என்று கேட்பதுபோல் நுாதன போராட்டம் செய்யவுள்ளோம் என அப்பகுதி பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : Roads ,Kumbakonam ,city ,commencement ,Paddy Aravadi Masimaka Festival ,
× RELATED அகரம்சீகூர் ஊராட்சியை பேரூராட்சியாக மாற்ற பொதுமக்கள் கோரிக்கை