×

பாதரை ஊராட்சியில் ஆழ்துளை கிணற்றால் விபத்து அபாயம்

பள்ளிபாளையம், பிப்.7: பள்ளிபாளையம் ஒன்றியம் பாதரை ஊராட்சி மணல்மேடு பகுதியில் திறந்து கிடக்கும் ஆழ்துளை கிணற்றால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியத்தின் பதினைந்து ஊராட்சிகளில் மிககுறைவான வாக்காளர்களை கொண்டது, பாதரை ஊராட்சி. 6 வார்டுகளை மட்டும் கொண்ட இந்த ஊராட்சியில் மணல்மேடு பகுதியில் கருப்பு டேங்கிற்கு தண்ணீர் ஏற்ற பொருத்தப்பட்ட மின்மோட்டார் பழுதடைந்தது. ஒன்றரை வருடங்களுக்கு முன்பு பழுதுபார்க்க கழற்றி எடுத்துச்செல்லப்பட்ட மின்மோட்டார், இன்னும் பொறுத்தப்படவில்லை. மின்மோட்டார் கழற்றப்பட்ட பின்னர் ஆழ்துளை கிணற்றை பாதுகாப்பாக மூடி வைக்காமல் அலட்சியமாக திறந்து போட்டுள்ள ஊராட்சி நிர்வாகிகளின் நடவடிக்கை, அப்பகுதி மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி குழந்தை சுஜித் மரணத்திற்கு பிறகு, தமிழ்நாடு முழுவதும் திறந்து கிடந்த ஆழ்துளை கிணறுகளை மூட அரசும், கலெக்டரும் எடுத்த துரித நடவடிக்கை பலரின் பாராட்டையும் பெற்றது. அதன்பின்னர் திறந்து கிடக்கும் ஆழ்துளை கிணறுகளை மூடும் நடவடிக்கைகளை அதிகாரிகள் அலட்சியப்படுத்தியுள்ளனர். பாதரை கிராமத்தில் திறந்து கிடக்கும் ஆழ்துளை கிணற்றை மூடாவிட்டால் இன்னொரு அசம்பாவிதம் ஏற்பட காரணமாகிவிடும், என அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

Tags : accident ,well ,
× RELATED விருதுநகர் குவாரி விபத்தில்...