×

திருச்செங்கோடு அருகே துணை மின்நிலையத்தில் சோதனை ஓட்டம்

திருச்செங்கோடு, பிப்.7: திருச்செங்கோடு அருகே, ஏமப்பள்ளியில்  துணைமின் நிலையத்தின் சோதனை ஓட்டத்தை, அமைச்சர் தங்கமணி தொடங்கி வைத்தார். திருச்செங்கோடு  தாலுகா  ஏமப்பள்ளியில்  துணைமின் நிலையத்தின் சோதனை ஓட்ட துவக்க  விழா,  கலெக்டர் மெகராஜ் தலைமையில் நடந்தது. எம்எல்ஏக்கள் சந்திரசேகரன்,  பொன்.சரஸ்வதி முன்னிலை வகித்தனர். மின்துறை அமைச்சர் தங்கமணி சோதனை  ஓட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது: ஏமப்பள்ளி பகுதி  விவசாயம் நிறைந்த பகுதி ஆகும். இப்பகுதியில்  குறைந்த மின்னழுத்தம் இருப்பதால் துணை மின் நிலையம் அமைத்து தருமாறு  விவசாயிகள் கோரிக்கை விடுத்ததின் அடிப்படையில் ₹10.28 கோடி மதிப்பீட்டில்  துணை  மின் நிலையம் அமைக்கப்பட்டு, சோதனை ஓட்டம் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.  விரைவில் இதனை முதல்வர்  திறந்து வைக்கவுள்ளார். கடந்த 4 ஆண்டுகளில்  480 துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்தாண்டில், இது 119வது  துணை மின்நிலையம் ஆகும். இந்தாண்டில் 130 துணை மின் நிலையம்  அமைக்கப்படவுள்ளது. மின்கோபுரங்கள் அமைக்க விவசாய மக்கள்  அளித்த நிலங்களுக்கு நஷ்ட ஈடு தொகை வழங்கப்படும்.

தமிழக அரசு தென்னை மரங்களுக்கு ₹37,500 வழங்க புதிய  அரசாணை வெளியிட்டுள்ளது. கோடைகாலம் வரவிருப்பதால்  விவசாயத்திற்கு ஆற்றிலிருந்து தண்ணீர் எடுக்க வாய்ப்பு உள்ளது. எனவே,   தடையில்லாமல் சீரான மின்சாரம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு  வருகிறது. நாமக்கல் மாவட்டம், இதுவரை பெறாத வளா்ச்சியை கடந்த 8 ஆண்டுகளில்   பெற்றுள்ளது. திருச்செங்கோடு- நாமக்கல் சாலை, திருச்செங்கோடு வேலூர்   சாலை 4 வழிச்சாலைகளாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் விபத்துகள் குறையும். இவ்வாறு அமைச்சர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் திருச்செங்கோடு ஆர்டிஓ மணிராஜ்,  தொடரமைப்பு திட்ட இயக்குநா் செந்தில்வேலன், தாசில்தார் கதிர்வேல் உள்ளிட்ட  பலர் கலந்து கொண்டனர்.

Tags : Test run ,power station ,Tiruchengode ,
× RELATED 10 ஆண்டுகளாக நஷ்டஈடு வழங்காத...