×

மகசூல் அதிகரிப்பால் செண்டுமல்லி விலை வீழ்ச்சி

ஓசூர், பிப்.7: ஓசூர் பகுதியில் மகசூல் அதிகரிப்பால் செண்டுல்லி விலை வீழ்ச்சியடைந்துள்ளதால், சாலையில் வீசும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் சுற்றுப்புற பகுதியில் பரவலாக செண்டுல்லி சாகுபடி செய்துள்ளனர். ஆண்டு முழுவதும் செண்டுமல்லிக்கு மிகுந்த வரவேற்பு உள்ளதால் சாகுபடி பரப்பினை அதிகரித்து வருகின்றனர். இந்நிலையில், தற்போது விளைச்சல் அதிகரித்துள்ளது. கடும் பனிப்பொழிவினை தொடர்ந்து கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டியெடுப்பதால் மொட்டுக்கள் அனைத்தும் விரைவிலேயே மலர்ந்து அறுவடைக்கு வருவதால் சந்தைக்கு வரத்து அதிகரித்துள்ளது. இதனால், விலையும் சரிந்து வருகிறது. ஒரு கிலோ 5 முதல் 10 வரையிலும் விற்பனை செய்யப்படுவதால் உரிய விலை கிடைக்காத விரக்தியில் சாலையோரம் பூக்களை வீசி செல்லும் அவலநிலை காணப்படுகிறது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ஓசூர் சுற்றுப்புற பகுதிகளில் நல்ல மண்வளம் மற்றும் சீரான தட்பவெப்ப நிலை நிலவி வருவதால் செண்டுமல்லி, ரோஜா, பட்டன் ரோஸ் என பல வகையான பூச்செடிகளை சாகுபடி செய்துள்ளோம். இங்கு விளைவிக்கப்படும் பூக்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. புத்தாண்டு, பொங்கல் மற்றும் திருமணம், கோயில் விழாக்களில் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. ஒரு வாரம் வரையிலும் வாடாத மலர் என்பதால் இந்த பூக்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. செண்டுமல்லியை பொறுத்தவரை ஒரு ஏக்கர் சாகுபடிக்கு ₹50 ஆயிரம் வரையிலும் செலவாகிறது. தற்போது, ஏராளமானோர் செண்டுமல்லி நடவு செய்துள்ளனர். இதனால், வரத்து அதிகரித்துள்ளது. தற்போது, ஒரு கிலோ ₹5 முதல் ₹10க்கு விற்பனையாகிறது. போதிய விலை கிடைக்காத விரக்தியில் சந்தைக்கு எடுத்து வரும் செண்டுமல்லி பூக்களை சாலையோரம் வீசி செல்லும் அவலநிலை காணப்படுகிறது என்றனர்.

Tags :
× RELATED நர்சிங் மாணவி கடத்தல் வாலிபர் மீது புகார்