×

கிருஷ்ணகிரி அணை பகுதியில் பாதுகாப்பு குழுவினர் ஆய்வு

கிருஷ்ணகிரி, பிப்.7:  கிருஷ்ணகிரி அணையின் கீழ் பகுதியில், தண்ணீர் விழும் இடத்தை ஆய்வு செய்ய அணை பாதுகாப்பு குழுவினர் வரவுள்ளதால், அதற்கான முன்னேற்பாடு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கிருஷ்ணகிரி அணையில் 8 பிரதான மதகுகள் உள்ளது. கடந்த 2017ம் ஆண்டு ஒரு மதகு உடைந்துவிட்டது. இதையடுத்து, அந்த மதகை கடந்த 2018ம் ஆண்டு அகற்றிவிட்டு, புதிய மதகை பொருத்தினர். மற்ற 7 மதகுகளையும் மாற்ற வேண்டுமென அரசியல் கட்சியினர் மற்றும் விவசாய சங்கத்தினர் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, மற்ற 7 மதகுகளையும் அகற்றி விட்டு, புதிய மதகுகள் அமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. அணையில் இருந்து பிரதான மதகுகள் வழியாக தண்ணீர் திறக்கும்போது, கீழே உள்ள 6 அடி பள்ளத்தில் விழுந்து, பின்னர் ஆற்றில் ஓடும்படி அமைக்கப்பட்டுள்ளது. தண்ணீர் கீழே விழும் பகுதியில் வேகத்தை கட்டுப்படுத்த அந்த 6 அடி பள்ளத்தில் 23 பில்லர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அணை கட்டி முடித்து 63 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அணையின் கீழ் பகுதியில் தண்ணீர் விழுந்து பில்லர்கள் ஏதாவது சேதம் ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில், கடந்த 5 நாட்களாக பள்ளத்தில் உள்ள தண்ணீரை நான்கு ராட்சத மோட்டார்கள் மூலம் வெளியேற்றினர். தற்போது, தண்ணீர் முழுவதும் வடிந்துள்ளதால் 23 பில்லர்களும் நன்றாக உள்ளதாகவும், கடந்த 45 ஆண்டுக்கு பின்பு தற்போது தான் இரண்டாவது முறையாக இந்த இடத்தை ஆய்வு செய்ய உள்ளதாகவும், இன்னும் ஓரிரு வாரங்களில் அணை பாதுகாப்பு குழுவினர் இந்த ஆய்வை மேற்கொள்வார்கள் எனவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Security team ,Krishnagiri Dam ,
× RELATED சாத்தனூர் அணை நீர்மட்டம் 117.85 அடியாக...