×

தர்மபுரி மாவட்டத்தில் மலிவு விலை சிமெண்ட் பெற விண்ணப்பம் வரவேற்பு

தர்மபுரி, பிப்.7: தர்மபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழி வெளியிட்டுள்ள அறிக்கை: வீடு கட்டும் நடுத்தர மக்களின் பொருளாதார சுமையை குறைக்கும் வகையில், ஒரு மூட்டை சிமெண்ட் 190 என்ற மிகக்குறைந்த விலையில் அம்மா சிமெண்ட் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள செட்டிநாடு, ராம்கோ, அல்ட்ராடெக், இந்தியா, டால்மியா, அசோசியேட் மற்றும் ஜூவாரி ஆகிய நிறுவனங்களின் உற்பத்தி திறனுக்கு ஏற்றவாறு, மாதம் 2 லட்சம் மெட்ரிக் டன் சிமெண்ட்டை இத்திட்டத்திற்காக அரசுக்கு வழங்குகின்றனர். இத்திட்டத்தின் மூலம், தகுதியான பயனாளிகளுக்கு, கட்டுமான பணிக்கு 500 சதுர அடி வரை அதிகபட்சமாக 250 மூட்டைகளும், 501 முதல் 1000 சதுர அடி வரை அதிகபட்சமாக 500 மூட்டைகளும், 1001 முதல் 1500 சதுர அடி வரை அதிகபட்சமாக 750 மூட்டைகளும் வழங்கப்படுகின்றன.

இது மட்டுமில்லாமல், வீடுகளை பழுதுபார்க்கவும், புதுப்பிக்கவும் குறைந்தபட்சம் 10 முதல் 100 மூட்டைகள் வரை சிமெண்ட் வழங்கப்படுகிறது. முதலமைச்சரின் பசுமை வீடுகள், இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளுக்கும் குறைந்த விலையில் அம்மா சிமெண்ட் வழங்கப்படுகிறது. இந்த சிமெண்ட் பெறுவதற்கு, வீடு கட்டுவதை உறுதி செய்வதற்காக அங்கீகரிக்கப்பட்ட வீடு கட்டும் திட்டத்தின் வரைபடம் அல்லது கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மேற்பார்வையாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சாலை ஆய்வாளர் இவர்களில் யாரேனும் ஒருவரிடம் சான்றிதழ் பெறப்பட்டு ஒப்படைக்கப்பட வேண்டும்.

இத்திட்டத்தில் பயன்பெறும் பயனாளிகள், சிமெண்ட் மூட்டைகளை தங்களது சொந்த உபயோகத்திற்கு மட்டுமே பயன்படுத்துகிறோம் என உறுதிமொழி கடிதம் சமர்ப்பிக்க வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் அம்மா சிமெண்ட் திட்டம் 01.01.2015 முதல் தொடங்கப்பட்டு, மொத்தம் 11 கிடங்குகள் செயல்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சொந்த வீடு கட்டுவதற்கு சிமெண்ட் தேவைப்படுபவர்கள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அலுவலகத்தை அணுகி பயன் பெறலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Dharmapuri district ,
× RELATED சென்னையில் இருந்து...