×

இன்று நடக்கிறது கரூர் நகரில் வேலைவாய்ப்புக்கு பஞ்சமில்லை

கரூர், பிப். 7: கரூர் மாவட்ட வேலைவாய்ப்புத்துறை மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடந்தத. கலெக்டர் அன்பழகன் தலைமை வகித்தார். முகாமை துவக்கி வைத்து தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது: படித்த அனைவருக்கும் அரசு வேலை கிடைக்கும் என்பது நடைமுறையில் சாத்தியமற்றது. தனியார் துறையில் படிப்புக்கு ஏற்ப பல்வேறு வேலைவாய்ப்புகள் அதிகம் உள்ளன. தமிழகத்தில் தொழில்துறையில் முன்னேற்றமுள்ள மாவட்டங்களில் கரூரும் ஒன்று. உலகளவில் வீட்டு உபயோகத்துக்கான ஜவுளி உற்பத்தியில் கரூர் முதலிடத்தில் உள்ளது.

கிட்டத்தட்ட ரூ.4 ஆயிரம் கோடிக்கு மேலாக அந்நிய செலவாணி, ரூ.1500 கோடிக்கான இந்திய அளவிலான ஜவுளி உற்பத்தியும் கொண்ட கரூர் நகரில் வேலைவாய்ப்புக்கு பஞ்சமில்லை. தனியார் துறையிலும் நமது திறமையை நிரூபிக்க பல வாய்ப்புகள் உள்ளன. போக்குவரத்து துறையில் சாலை பாதுகாப்பு என்பது மிகப்பெரிய சவாலாக இருந்தது. 2000ம் ஆண்டு 10 ஆயிரம் வாகனங்களுக்கு 19 பேர் உயிரிழந்தனர் என்ற நிலை இருந்தது. தற்போது 10ஆயிரம் வாகனங்களுக்கு உயிரிழப்பு 3ஆக குறைக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 53 சதவீதம் அளவுக்கு விபத்து, உயிரிழப்புகள் குறைக்கப்பட்டுள்ளன. 2016ம் ஆண்டு கணக்கெடுக்கப்பட்டதில் இருந்து 2020க்குள் இந்தியாவில் விபத்து, உயிரிழப்புகளை 50 சதவீதமாக குறைக்கும் வகையில் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. இளைஞர்களாகிய நீங்கள் வாகனம் ஓட்டும்போது ஹெல்மட் அணிவதும், சீட்பெல்ட் அணிவதும் முக்கியம் என்பதை உணர்ந்து அதை பின்பற்ற வேண்டும்.

கரூர் மாவட்ட வேலைவாய்ப்புத்துறை மூலம் கடந்த 2 ஆண்டுகளில் 100க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பு முகாம், தன்னார்வ பயிலும் வட்ட வகுப்புகளும் நடத்தப்பட்டுள்ளது. இதில் பங்கேற்றுள்ள 12,059 நபர்களில் 4854 நபர்கள் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர் என்றார். 90க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்ற முகாமில் 2200க்கும் மேற்பட்டோர் பதிவு செய்து நேர்காணலில் பங்கேற்றனர். அவர்களில் தேர்வு செய்யப்பட்ட 970 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. முன்னதாக கலெக்டர் அலுவலக வளாகத்தில் புதிதாக கட்டப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்களை பாதுகாப்பாக வைப்பதற்காக கிடங்கி அமைக்கும் பணிக்கான பூமிபூஜையும் நடந்தது. எம்எல்ஏ கீதா, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், கல்லூரி முதல்வர் கவுசல்யா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ராதிகா கலந்து கொண்டனர்.

Tags : Karur ,
× RELATED தெருவில் தேங்கி நிற்கும் சாக்கடை...