×

கூட்டு குடிநீர் திட்டத்தில் உள்ள குறைபாடுகளை சரி செய்து கோடைகால குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும்

கரூர், பிப். 7: கூட்டு குடிநீர் திட்டத்தில் உள்ள குறைபாடுகளை சரி செய்து கோடைகால குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கரூர் மாவட்டத்தில் காவிரியாற்றை நீராதாரமாக கொண்டு 1,440 குக்கிராமங்கள் பயன்பெறும் வகையில் 14 கூட்டு குடிநீர் திட்டங்கள், குடிநீர் வாரியம் மூலம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இதுதவிர 11 பேரூராட்சிகள், கரூர், குளித்தலை இரு நகராட்சிகளிலும் காவிரி நீரை ஆதாரமாக கொண்டு குடிநீர் விநியோக திட்ட பணிகள் நடந்து வருகின்றன.இந்த கூட்டு குடிநீர் திட்டத்தில் கடைநிலை கிராமங்களுக்கு போதியளவு குடிநீர் கிடைக்கவில்லை. பேரூராட்சி, நகராட்சி பகுதிகளிலும் குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்த வேண்டுமென தொடர்ந்து பொதுமக்களால் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே கூட்டு குடிநீர் திட்டத்தில் இடம் பெற்றுள்ள கடைநிலை கிராமங்களுக்கு உரிய நீர் கிடைக்காத பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஒரு நிர்வாக பொறியாளர், 2 உதவி நிர்வாக பொறியாளர், 2 உதவி பொறியாளர் என 5 முதல் 7 பேர் கொண்ட குழுக்களை சேர்ந்த 85 பொறியாளர்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கரூர் மாவட்டத்துக்கு வந்தனர்.கடந்தாண்டு இவர்கள் கரூர் மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களுக்கும் சென்றனர். மேலும் குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனரும் கரூர் மாவட்டம் வந்து ஆய்வு பணிகளை மேற்கொண்டார்.இதையடுத்து கூட்டு குடிநீர் திட்டத்தில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்து சரி செய்ய ஆய்வு அறிக்கைகளை அரசுக்கு குழுவினர் சமர்ப்பித்தனர். இதன்படி தேவையான புனரமைப்பு பணிகளை செய்து குடிநீர் விநியோகம் முறைப்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

கரூர் மாவட்டத்தில் 1,440 குக்கிராமங்களில் ஆய்வின்போது 134 இணைப்புகள் சட்ட விரோதமாக பெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 17 இணைப்புகள் முதன்மை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து தனியார் தொட்டிகளுக்கு இணைப்பு வழங்கி குடிநீரை பயன்படுத்துவது தெரியவந்தது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும் தொடர் மேல் நடவடிக்கை எடுக்கவில்லை. வாரியத்தில் இருந்து சீரமைக்க தேவையான நிதி கோரப்பட்டிருக்கிறது. நிதி கிடைத்ததும் சீரமைப்பு வேலைகள் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதற்கு உடனடி தீர்வாக மெயின் லைனில் இருந்து திட்டத்தில் இல்லாத பகுதிக்கு தண்ணீர் செல்வதை தடுக்க வேண்டும். மோட்டார் வைத்து தண்ணீர் உறிஞ்சுவதை தடுக்க வேண்டும். முறைகேடாக பெறப்பட்ட இணைப்புகளை துண்டிக்க வேண்டுமென பொதுமக்கள் தொடர் கோரிக்கை வைத்தும் பயனில்லை.ஊரக உள்ளாட்சி தேர்தல்கள் நடந்ததால் இப்பணிகள் செயல்படாமல் உள்ளன. வாரம்தோறும் கலெக்டர் அலுவலகத்துக்கு குடிநீர் பிரச்னைக்காக பொதுமக்கள் வர துவங்கி விட்டனர். கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெருவெள்ளம் ஏற்பட்டு வெள்ளம் வந்தால் காவிரி பிரச்னையை மத்திய, மாநில அரசுகள் மறந்து விடுவது வாடிக்கையாக இருக்கிறது. கோடைகால குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு சட்டவிரோத குடிநீர் இணைப்புகளை துண்டிக்க வேண்டும். தனியார் கிணறுகளுக்கு கூட்டு குடிநீர் திட்ட நீர் செல்வதை தடுக்க வேண்டும். குடிநீர் வீணாகாமல் தடுக்க முன்னேற்பாடு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

Tags : shortcomings ,
× RELATED ஏராளமான குறைபாடுகள் உள்ளதால் தமிழக...