×

மாயனூர் கட்டளை மேட்டு வாய்க்கால் புனரமைப்பு பணிக்காக பாசன வாய்க்கால்களில் கான்கிரீட் தளம் அமைக்கக்கூடாது

குளித்தலை, பிப். 7: மாயனூர் கட்டளை மேட்டு வாய்க்கால் புனரமைப்பு பணிக்காக பாசன வாய்க்கால்களில் கான்கிரீட் தளம் அமைக்கக்கூடாது என்று குளித்தலையில் நடந்த விளக்க கூட்டத்தில் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.கரூர் மாவட்டம் மாயனூர் கட்டளை மேட்டு வாய்க்கால் மாயனூரில் இருந்து தாயனூர் வரை 62 கிலோ மீட்டருக்கு ரூ.335.5 கோடிக்கு புனரமைப்பு பணி குறித்த பாசன விவசாயிகளிடையே விளக்க கூட்டம் குளித்தலை அண்ணா சமுதாய மன்றத்தில் நடந்தது. குளித்தலை சார் ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்தார். ஆற்று பாதுகாப்பு பொதுப்பணித்துறை திருச்சி உதவி நிர்வாக செயற்பொறியாளர் பாஸ்கர், உதவி செயற்பொறியாளர்கள் வெங்கடேஷ், கார்த்திக், உதவி பொறியாளர் கொளஞ்சிநாதன், தாசில்தார் மகாமுனி முன்னிலை வகித்தனர். ஆற்று பாதுகாப்பு பொதுப்பணி அதிகாரிகள் தரப்பில் கட்டளை மேட்டு வாய்க்கால் புனரமைப்பு குறித்து விளக்கமளித்து பேசினர். அதன்பிறகு விவசாயிகளிடையே கருத்துகள் கேட்கப்பட்டது.

அப்போது விவசாயிகள் தரப்பில் பேசும்போது, கட்டளை மேட்டு வாய்க்கால் புனரமைப்பு பணி துவங்குவது வரவேற்கத்தக்கது. தற்போது மேட்டூர் அணை நீர்மட்டம் 110 கன அடி இருக்கும்போது இத்திட்டத்தை விவசாயிகளின் நலன்கருதி ஒத்தி வைக்க வேண்டும். பாசன வாய்க்காலில் கான்கிரீட் தளம் போட்டால் நீராதாரம் பாதிக்கப்படும். பாசன வாய்க்கால் பகுதியில் கான்கிரீட் தளம் அமைத்தால் நீர்மட்டம் பாதிக்கப்படும். இதற்கு மாற்றுவழி இருக்கிறதா என பார்க்க வேண்டும். தற்போது நடந்த தூர்வாரும் பணியை இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது செய்ய வேண்டும். அப்படி செய்தால் இதுபோன்ற கான்கிரீட் தளம் அமைக்க வேண்டிய அவசியமே இல்லை.கட்டளைமேட்டு வாய்க்கால் பகுதியில் கான்கிரீட் தளம் அமைத்தால் சுற்றியுள்ள பகுதிகளில் நீராதாரம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகும். தற்போது இனுங்கூர் பகுதியில் 80 அடி ஆழத்தில் ஆழ்குழாய் போடப்பட்டு வருகிறது. மேலும் மாயனூர் இருந்து தாயனூர் வரை 21,000 ஏக்கரில் நெல், கரும்பு, வாழை, கோரை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதனால் கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டால் நிலத்தடி நீர் குறைந்து விவசாயம் பாதிக்கப்படும். கடைமடை பகுதியில் 10,000 ஏக்கர் நிலத்தை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். அப்போது விவசாயி ஒருவர் எழுந்து கட்டளைமேட்டு வாய்க்கால் பகுதியில் கான்கிரீட் தளம் அமைத்தால் கடைமடை வரை தண்ணீர் தங்கு தடையின்றி வரும் என்றனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குளித்தலை பகுதி விவசாயிகள் கோஷமிட்டனர். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து விவசாயிகள் பேசும்போது, மார்ச் மாதம் இறுதி வரை விவசாயத்துக்கு தண்ணீர் விட வேண்டும் என்றனர்.ஆற்று பாதுகாப்பு பொதுப்பணித்துறை அதிகாரிகள் பேசும்போது, தென்கரை வாய்க்காலுக்கு சூழ்நிலைக்கேற்ப தண்ணீர் விட்டு விட்டு திறந்து விடப்படும். இப்போது 2 நாட்களில் பாசனத்துக்கு தண்ணீர் விடப்படும். கட்டளை மேட்டு வாய்க்கால் பணி மார்ச் 1ம் தேதி துவங்கும் என தெரிவித்த நிலையில் விவசாயிகள் கூடுதலாக அவகாசம் கேட்டிருந்தீர்கள். அதனால் மார்ச் 20ம் தேதி வரை தண்ணீர் விடப்பட்டு ஏப்ரல் 1ம் தேதி பணிகள் துவங்கி மே, ஜூன், ஜூலை ஆகிய 4 மாதங்கள் பணி நடக்கவுள்ளது.இதில் மாயனூரில் இருந்து தாயனூர் வரை 62 கிலோ மீட்டருக்கு ரூ1 கோடி மதிப்பீட்டில் வாய்க்கால் பூரண மீட்புப்பணி துவங்கியிருக்கிறது.இதில் ஒவ்வொரு 10 கிலோ மீட்டருக்கும் இடங்கள் தேர்வு செய்து 4 இடங்களில் பணிகள் தொடங்கும். இப்பணிகள் மேட்டூர் அணையிலிருந்து நீர்வரத்து வரும் காலங்களில் நிறுத்தி விட்டு மீண்டும் பணிகள் தொடங்கும். இப்பணி 2 ஆண்டுகள் நடைபெறும். கட்டளை மேட்டு வாய்க்கால் பகுதியில் ஆங்காங்கே உள்ள பழைய நடைபாலங்கள் புதுப்பிக்கப்படும். அதனால் விவசாயிகள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார்.இதையடுத்து கூட்டம் முடிந்ததும் கட்டளை மேட்டு வாய்க்கால் புனரமைப்பு பணிக்கு விளக்க கூட்டம் என கூறி விட்டு விவசாயிகளின் கருத்துகளுக்கு செவி சாய்க்காமல் அரசுக்கு சாதகமாக அதிகாரிகள் செயல்படுகிறார்கள் என்று வேதனையுடன் விவசாயிகள் கலைந்து சென்றனர். கூட்டத்தில் மாயனூர் கட்டளை காவிரி தென்கரை பாசன விவசாயிகள், கடைமடை பகுதி விவசாயிகள் பங்கேற்றனர்.

Tags :
× RELATED ஆசிரியர்களுக்கு செயற்கை நுண்ணறிவு...