×

தேனியில் பூங்கா பராமரிப்பு பணிகள் மும்முரம்

தேனி, பிப். 7: தேனியில் புதிய பஸ்ஸ்டாண்ட் பூங்கா, சமதர்மபுரம் காமராஜர் பூங்கா, கேஆர்ஆர் நகர் பூங்கா உள்ளிட்ட பல்வேறு பூங்காக்கள் பராமரிப்பின்றி காணப்படுகின்றன. இதனால் பொதுமக்களுக்கு பொழுது போக்கு வசதிகள் இல்லை. அத்துடன் பூங்காக்களை சமூக விரோதிகள் பயன்படுத்தி வந்தனர். இது தொடர்பாக தினகரன் இதழில் செய்தி வெளியானது. இதனை தொடர்ந்து நகராட்சி கமிஷனர் நாகராஜ், பொறியாளர் சுரேஷ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் பூங்காக்களை ஆய்வு செய்தனர். தேனி கேஆர்ஆர் நகரில் அதிகாரிகள் ஆய்வு செய்த போது, குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் பழனிச்சாமி, அந்தோணி, முகமதுசபி தலைமையில் பொதுமக்கள் பூங்கா பராமரிப்பினை குடியிருப்போர் சங்கத்திடம் ஒப்படைக்குமாறு முறையிட்டனர். இதனை ஏற்றுக் கொண்ட கமிஷனர் ‘முறைப்படி பூங்கா பராமரிப்பு குடியிருப்போர் சங்கத்திடம் ஒப்படைக்கப்படும். மற்ற பூங்காக்களின் பராமரிப்பு பணிகளும் தனியார் உதவியுடன் நடந்து வருகிறது. கேஆர்ஆர் நகரில் உள்ள பாலவிநாயகர் கோயிலில் குடிநீர் வசதி ஏற்படுத்தவும்் நடவடிக்கை எடுக்கப்படும்’ என பொதுமக்களிடம் உறுதி அளித்தார்.

Tags :
× RELATED களைகட்டிய தற்காலிக பூத்கள்