×

தமிழக சோதனைச்சாவடிகளில் கேரள வாகனங்கள் சோதனை

தேனி, பிப். 7: கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகளை ஏற்றிக் கொண்டு லாரிகள் எளிதாக தேனி மாவட்டத்திற்குள் வந்து கொட்டுகின்றன. தேனி மாவட்டத்தில் இருந்து ரேஷன் அரிசி, கல், மணல், ஜல்லி ஏற்றிச் செல்லும் வாகனங்களும் தடையின்றி சென்று வருகின்றன. ஆனால், சுற்றுலாப் பயணிகள் வந்தால் போலீசார் ஆயிரத்தெட்டு கேள்வி கேட்டு அவர்களை மிரட்டி, பணம் பறித்து வருகின்றனர். இது குறித்து தினகரன் இதழில் விரிவாக செய்தி வெளியாகி இருந்தது.
இதனை தொடர்ந்து தேனி எஸ்.பி., சாய்சரண் தேஜஸ்வி, சோதனைச்சாவடி போலீசாருக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். இதன்படி, சோதனைச்சாவடிகளில் கேரளா சென்று வரும் விதிமீறல் வாகனங்களை கடுமையாக தணிக்கை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்த வகையிலும் விதிமீறல்களை அனுமதிக்க கூடாது. அப்படி அனுமதித்தால் சோதனைச்சாவடியில் பணியில் இருந்த போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் தேவையின்றி சுற்றுலாப் பயணிகளை தொந்திரவு செய்யக்கூடாது. அவர்களிடம் இருந்து புகார் வந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாறாக விதிகளை மீறிச் செல்லும் சுற்றுலாப் பயணிகள், வாகனங்களை மிகவும் சரியான சட்ட வழிமுறைகளின்படி மட்டும் கையாள வேண்டும்என உத்தரவிட்டுள்ளார்.தேனி மாவட்ட எஸ்.பியின் இந்த உத்தரவால் சோதனைச்சாவடி போலீசார் கடந்த இரண்டு நாட்களாக சுறுசுறுப்புடன் ஆய்வுப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : Kerala ,Tamil Nadu ,
× RELATED கோடை மழை கொட்டியும் நீர்வரத்து குறைவு;...