×

மானாமதுரை வைகை ஆற்றில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்றும் பணி துவக்கம்

மானாமதுரை, பிப்.7: மானாமதுரை வைகைஆற்றில் வளர்ந்துள்ள கருவேலமரங்கள் புதர்ச்செடிகளை அகற்றும் பணியை மானாமதுரை எம்எல்ஏ நாகராஜன் துவக்கி வைத்தார். மானாமதுரை வைகை ஆற்று பகுதியில் நிலத்தடி நீரை உறிஞ்சி வளரும் கருவேல மரங்கள் அதிகமாக காணப்படுகிறது. ஆற்றை ஆக்கிரமித்து வளர்ந்து வருவதால் மெல்ல,மெல்ல வைகை ஆறு இருந்த இடம் தெரியாமல் மறைந்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மானாமதுரை வைகை ஆற்று பகுதியில் எங்கு பார்த்தாலும் மணலாக காட்சி அளித்தது. தற்போது தொடர்ந்து நடக்கும் மணல் கொள்ளை மற்றும் வைகையில் தொடர்ந்து தண்ணீர் வராததினால் கட்டாந்தரையாக காட்சி அளிக்கிறது.குறிப்பாக தடுப்பணை, பனிக்கனேந்தல், ரயில்வேகாலனி, கிருஷ்ணராஜபுரம், மறவர்தெரு கரையோரங்கள் உள்ளிட்ட பல இடங்களில் அதிகளவில் கருவேல மரங்கள் வளர்ந்து ஆறு இருந்த சுவடே தெரியாமல் மாறி வருகிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஐகோர்ட் மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஆறுகள், கண்மாய்கள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளிலும், தனியார் நிலங்களிலும் வளர்ந்துள்ள கருவேல மரங்களை வேரோடு வெட்டுவதற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஆனால் மானாமதுரை வைகை ஆற்று பகுதியில் பொதுப்பணித்துறையினர் கண்துடைப்பாக ரயில்வேபாலம் முதல் பழையமேம்பாலம் வரை சிலவற்றை மட்டும் பிடுங்கியதுடன் ஆற்றினை சுத்தம் செய்ததாக கணக்கு காண்பித்தனர். அதன்பின் கடந்த 4 ஆண்டுகளாக கருவேலமரங்களை அகற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் பனிக்கனேந்தல் தடுப்பணை அருகில் அதிகளவில் கருவேல மரங்கள் வளர்ந்து காணப்படுகின்றன. இது குறித்து பல்வேறு சமூக அமைப்புகள், கட்சியினர் மாவட்ட நிர்வாகத்திற்க்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து நேற்று மானாமதுரை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கருவேலமரங்களை
இயந்திரங்களை கொண்டும் அகற்றும் பணிகள் துவங்கின. மானாமதுரை எம்எல்ஏ நாகராஜன், மாவட்ட கவுன்சிலர் மாரிமுத்து ஆகியோர் துவக்கி வைத்தனர். வைகை மேம்பாலத்தின் கீழ் இருந்து துவங்கும் பணிகள் ஆதனூர்ரோடு வரை உள்ள இருகரைகள் வரை உள்ள கருவேலமரங்கள், புதர்ச்செடிகள் அகற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

Tags : Commencement ,river ,Manamadurai Vaigai ,
× RELATED மங்களகோம்பை செல்லும் சாலையில் புலியூத்து ஆற்றின் குறுக்கே பாலம் தேவை