×

இளையான்குடி பகுதியில் குண்டு மிளகாய்க்கு விலை இல்லை

இளையான்குடி, பிப்.7: இளையான்குடி வட்டாரத்தில் விளைந்த குண்டு மிளகாய்க்கு உரிய விலை இல்லாததால் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இளையான்குடி பகுதியில் நடப்பாண்டில் சுமார் 4 ஆயிரத்து 66 ஹெக்டேரில் மிளகாய் விவசாயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கடந்த மாதங்களில் பெய்த தொடர் மழையால், மிளகாய் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது. நோய் மற்றும் பூச்சி தாக்குதலால் மிளகாய் மகசூல் பெருமளவு பாதிக்கப்பட்டு, தப்பிய செடிகளில் தற்போது மிளகாய் பழுக்க ஆரம்பித்துள்ளது. கடந்த ஆண்டு விவசாயிகளிடமிருந்து ஒரு கிலோ குண்டு மிளகாய் ரூ.300 முதல் ரூ.320 வரை விற்பனையானது. ஆனால் இந்த ஆண்டு தனியார் கமிஷன் கடைகளில் அதே குண்டு மிளகாய் திடீரென விலை குறைந்து கிலோ ரூ.150 முதல் ரூ.180 வரை கொள்முதல் செய்யப்படுகிறது. குண்டு மிளகாயின் இந்த விலை இறக்கத்தால், மிளகாய் விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மிளகாய் விளைச்சல் மற்றும் வரத்து குறைவால் விலை உயரும் என எதிர்பார்த்த நிலையில், மாறாக குண்டுமிளகாய் விலை இறக்கத்தால், இளையான்குடி பகுதி மிளகாய் விவசாயிகள் அனைவரும் விரக்தியில் உள்ளனர். இது குறித்து விவசாயி சுப்பிரமணி கூறுகையில், இந்தாண்டு தொடர் மழையில் மிளகாய் செடிகளை கஷ்டப்பட்டு காப்பாற்றினோம். வரத்து குறைவால் கிலோ ரூ.250 முதல் ரூ.300 வரை விலையேறும் என எதிர்பார்த்தோம். ஆனால் தற்போது விலை குறைந்துள்ளது வேதனை அளிக்கிறது. அதனால் மிளகாய் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : area ,Ilangudi ,
× RELATED கர்நாடகாவில் வாகன சோதனையின்போது 1,200...