×

காளையார்கோவில் தாலுகாவோடு இணைப்பு

சிவகங்கை, பிப்.7: காளையார்கோவில் தாலுகாவோடு நாட்டரசன்கோட்டை பேரூராட்சியை இணைத்திருப்பதால் பொதுமக்கள் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் 7 தாலுகாக்கள் இருந்தன. இந்நிலையில் 2014ல் 8வது தாலுகாவாக காளையார்கோவில் அறிவிக்கப்பட்டு 2015ல் இருந்து செயல்படத் தொடங்கியது. காளையார்கோவில் ஒன்றியத்திற்குள் இருந்த காரணத்திற்காக சிவகங்கை நகர் பகுதியின் இரண்டாவது கி.மீ.யில் உள்ள ராகினிப்பட்டி உட்பட சிவகங்கை அருகில் உள்ள ஏராளமான கிராமங்களை காளையார்கோவில் தாலுகாவுடன் இணைத்துள்ளனர். நாட்டரசன்கோட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமத்தினர், சிவகங்கை தாலுகா அலுவலகத்திலேயே சாதி, வருமானம் உள்ளிட்ட சான்றிதழ்கள், விவசாய நிலங்களுக்கு தேவையான பல்வேறு ஆவணங்களை பெற்று வந்தனர். இந்நிலையில் காளையார்கோவில் தாலுகாவாக செயல்பட தொடங்கியதால் அங்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டரசன்கோட்டை, சிவகங்கையிலிருந்து 6 கி.மீ தூரத்தில் உள்ளது. ஆனால் நாட்டரசன்கோட்டைக்கும், காளையார்கோவிலுக்கும் இடையே உள்ள தூரம் 12.கி.மீ ஆகும். நாட்டரசன்கோட்டையிலிருந்து, காளையார்கோவிலுக்கு அரசு பஸ் மற்றும் தனியார் பஸ் உள்ளிட்ட எவ்வித போக்குவரத்து வசதியும் இல்லை.

சிவகங்கையிலிருந்து நாட்டரசன்கோட்டை வழியாக தேவகோட்டை, பாகனேரி, கல்லல், காரைக்குடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது. இதனால் நாட்டரசன்கோட்டை மற்றும் அருகிலுள்ள கிராமத்தினர் அனைத்து தேவைகளுக்கும் சிவகங்கை செல்கின்றனர். பள்ளி, கல்லூரி மாணவர்களும் சிவகங்கையிலேயே படித்து வருகின்றனர். காளையார்கோவில் தாலுகா அலுவலகம் செல்ல வேண்டிய நிலையால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். காளையார்கோவில் தாலுகாவிற்கு வருவாய் கிராமங்கள் பிரிக்கும் போது நாட்டரசன்கோட்டை மற்றும் சிவகங்கை அருகில் உள்ள கிராமங்களை சிவகங்கை தாலுகாவிலேயே இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். ஆனால் வருவாய்த்துறையினர் கண்டுகொள்ளவில்லை.பொதுமக்கள் கூறியதாவது:பொதுமக்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை கண்டுகொள்ளாமல் அலுவலர்கள் செயல்பட்டுள்ளனர். நாட்டரசன்கோட்டைக்கும், காளையார்கோவிலுக்கும் எவ்வித போக்குவரத்து தொடர்பும் இல்லாத நிலையில் காளையார்கோவில் செல்ல நாட்டரசன்கோட்டையிலிருந்து இரண்டு பஸ் மாற வேண்டும். இதனால் தேவையற்ற அலைச்சலும், நேர விரையமும் ஏற்படுகிறது. எனவே தூர அடிப்படை, போக்குவரத்து வசதி உள்ளிட்டவற்றை கணக்கில் கொண்டு நாட்டரசன்கோட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் சிவகங்கைக்கு அருகில் உள்ள கிராமங்களை சிவகங்கை தாலுகாவிலேயே இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : taluk ,Kaliyariko ,
× RELATED வல்லம்பட்டி பகுதியில் புதர்மண்டி...