×

பதனீர் சீசன் துவங்கிய நிலையில் விறகுக்கு வெட்டப்படும் பனைமரங்கள்

சாயல்குடி, பிப்.7:  சாயல்குடி பகுதியில் கடந்த கால வறட்சியால் பட்டுபோன பனைமரங்களை தற்போது வெட்டிவருவதால், வரும் காலங்களில் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
சாயல்குடி அருகே கன்னிராஜபுரம், நரிப்பையூர், பொன்னகரம், உறைகிணறு, பனைமரத்துப்பட்டி, பூப்பாண்டியபுரம், கன்னிகாபுரி, கூரான்கோட்டை, மேலச்செல்வனூர், பெரியகுளம், கடுகுசந்தை, சாத்தங்குடி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பனைமரங்கள் உள்ளன. பனைமர தொழிலில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர் குடும்பங்கள் ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக போதிய மழையின்றி வறட்சி நிலவி வந்தது. வறட்சியை தாக்குபிடிக்க கூடிய பனைமரங்கள் நு’ற்றுக்கணக்கில் பட்டுபோனது. இதனால் சீசனில் வருமானம் தரக்கூடிய கருப்பட்டி உற்பத்தி பாதிக்கப்பட்டது. மட்டைகளிலிருந்து நார் பிரித்தெடுத்தல், மட்டை காம்பவுன்ட் அமைத்தல், வீடு வேயுதல் மற்றும் இதர உபயோகத்திற்கு ஓலை வெட்டுதல் போன்ற வருமானம் தரக்கூடிய சிறு, சிறு தொழிலும் குறைந்து விட்டது.

ஆண்டுக்காண்டு தொடர்ந்து இத்தொழில் நலிவடைந்து வருவதால், அதன் உரிமையாளர்கள் கட்டிட உபயோகம், சேம்பர், காளவாசல் உள்ளிட்ட பயன்பாட்டிற்காக பனைமரங்களை வெட்டி வருகின்றனர். இந்தாண்டு நல்ல மழை பெய்து நீர்நிலைகள் பெருகினாலும் கூட பனைமரங்கள் அதிகம் உள்ள செவல்காடு(செம்மண்) பகுதியில் ஊரணி, பண்ணைக்குட்டைகள் இல்லாததால் பனைவிதைகளை போட்டு, புதிய மரக்கன்றுகளை வளப்பதற்கு போதிய தண்ணீர் வசதியில்லை. இதனால் போதிய பனைமரம் இன்றி இத்தொழில் அழிவைநோக்கி செல்வதாக தொழிலாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். பனைமர தொழிலாளர்கள் கூறும்போது, கடந்த காலங்களில் ஏற்பட்ட தொடர் வறட்சியால் பனை மரத்தொழில் நலிவடைந்து போனது. தொழிலாளர்கள் குடும்பங்கள் வறுமையில் வாடி வருகிறது. ஆண்டு தோறும்  பிப்ரவரி மாதம் சீசன் துவங்கும். சீசனுக்காக பனையை சீரமைத்தல், பதனீர் இறக்குதல், கருப்பட்டி காய்ச்சுதல், மரத்திலுள்ள தேவையற்ற மட்டைகளை நீக்கி, மட்டை மூலம்  கயிறு தயாரிப்பு, காம்பவுண்ட் அமைப்பதற்கு சீவுதல், நுங்கு வெட்டி விற்பனை செய்தல் போன்ற பணியால், தடையின்றி வேலை கிடைத்தது. நல்ல கூலியும் கிடைத்தது. தற்போது பதனீர் சீசன் துவங்கி விட்டது. மரத்தை சீரமைத்தல், பாளையை சீவி மண்பானை முட்டிகள் கட்டுதல் போன்ற பணிகள் நடந்து வருகிறது. ஆனால் கடந்த காலங்களில் பட்டுபோன மரங்களை அதன் உரிமையாளர்கள் பல்வேறு பயன்பாட்டிற்காக மரங்களை வெட்டி காலி செய்து வருகின்றனர். இடங்களையும் விற்று வருகின்றனர். இதனால் வரும் காலங்களில் தொழில் கிடைப்பது அரிதாகி விடும்.

சீசன் இல்லாத மற்ற காலங்களில் போதிய வருமானம் இன்றி குடும்பங்கள் வறுமையில் வாடும் நிலை தொடர்கிறது. இதனால் அரசு பனைவாரியம், பனைகருப்பட்டி கூட்டுறவு கடன் சங்கம் மூலம்  பிற தொழில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் செம்மண் காடுகளிலும் பண்ணைக்குட்டைகளை நீர் உறிஞ்சாத வகையில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி அமைத்து தரவேண்டும். புதிதாக நீர்வழித்தடங்களை அமைத்து குளம் அமைத்து தரவேண்டும்.
நீர்நிலை காலியிடங்களில் புதிய பனை மரக்கன்றுகளை நடவேண்டும். விவசாயிகளுக்கு விவசாய நிலங்களின் வரப்புகளில் பனைமரக்கன்றுகளை வளர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்தி புதிய மரக்கன்றுகளை வழங்க வேண்டும். சீசன்களில் பனைமர தொழிலுக்கு தேவையான தளவாட சாமான்களை நவீன முறையில் தயார் செய்து, அரசு மானியத்தில் வழங்கவேண்டும். தொழிலாளர் குடும்பத்திற்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கவேண்டும். தொழிலாளர் வைப்புநிதி முறையை அமல்படுத்தி, வைப்பு தொகையை அரசு செலுத்தவேண்டும். இதனால் வருங்கால அவசர மருத்துவ உதவிகள், பெண்கள் திருமணத்திற்கு உதவியாக இருக்கும். மாணவர்களுக்கு உதவித்தொகையை அதிகமாக வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Tags : season ,
× RELATED கோக் ஸ்டுடியோ தமிழ் சீசன் 2-ன் புதிய பாடல் “தமிழ் வாழ்த்து” வெளியீடு