×

மதுரையின் முக்கிய ரோடுகளில் ‘கேப்சர்’ கேமராக்கள் வேகமாக செல்வோரையும் துல்லியமாக படமெடுக்கும்

மதுரை, பிப். 7: மதுரை நகரில் குற்றங்களை தடுக்கவும், விதிகளை மீறும் நபர்களை கண்காணிக்கவும் முக்கிய ரோடுகளில் வேகமாக செல்வோரையும் துல்லியமாக படமெடுக்கும் கேப்சர் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது.
மதுரை நகரில் வழிப்பறி, திருட்டு, கொள்ளை போன்ற சம்பவங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். நகரில் உள்ள 2 ஆயிரம் வீதிகளில் குடியிருப்போர் நல சங்கம் மற்றும் போலீசார் இணைந்து குற்றங்களை தடுக்க கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி வருகின்றனர். எஸ்ஐ தலைமையில் போலீசார் வீதிகளில் பொறுப்பு அதிகாரிகளை நியமனம் செய்து கண்காணித்து வருகின்றனர். இருப்பினும், பூட்டிய வீடுகளை குறி வைத்து கொள்ளை அடிப்பது. போலீசார் போல் ஏமாற்றி நகை பறிப்பது, ஏடிஎம் கொள்ளை, நூதன மோசடி போன்ற சம்பவங்கள் அரங்கேறி கொண்டு தான் உள்ளது.

இந்நிலையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு தப்பி செல்பவர்களை குறிவைத்து பிடிக்கவும், போக்குவரத்து வீதிமீறலில் ஈடுபடும் வாகனங்களை அடையாளம் காணவும் துல்லியமாக படமெடுக்கும் ‘கேப்சர்’ வகை கேமராக்கள் நகரில் உள்ள முக்கிய இடங்களில் பொருத்தப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக நகர் எல்லை பகுதியான மேலூர்- ரிங்ரோடு சந்திப்பு, கோரிப்பாளையம், காளவாசல், பீபீகுளம் உள்ளிட்ட இடங்களில் ஒரே கம்பத்தில் பல்வேறு திசையை நோக்கி 10 கேமராக்கள் வரை பொருத்தப்பட்டு அதனை கண்காணிக்க தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து போலீசார் கூறும்போது, ‘மதுரை நகரில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், விபத்து மற்றும் விதிமீறல் உள்ளிட்டவைகளை கண்காணிக்கவும் ‘கேப்சர்’ வகை கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இவ்வகை கேமராக்கள் வேகமாக செல்வோரையும் தெள்ள தெளிவமாக படம் பிடிக்கும் தன்மை கொண்டதாகும். இதன்மூலம் குற்றவாளிகளை பிடிக்கவும், போக்குவரத்து விதிமீறல்களை கண்டுபிடித்து அபராதம் விதிக்கவும் வசதியாக இருக்கும். விரைவில் நகர் முழுவதும் உள்ள முக்கிய வீதிகள் அனைத்திலும் கேப்சர் கேமராக்கள் பொருத்தப்படும்’ என்றார்.

Tags : roads ,Madurai ,
× RELATED சாலை விரிவாக்க பணிக்காக மரங்கள்...