×

பாதி கூட முடியாமல் அந்தரத்தில் நிற்கும் அவலம் போக்குவரத்து நெரிசல், தூசியில் சிக்கி அவதி

மதுரை, பிப். 7: ஒரு நாளில் ஒரு லட்சத்து 75 ஆயிரம் வாகனங்கள் கடக்கும் மதுரை பைபாஸ் ரோடு காளவாசல் சந்திப்பு மேம்பாலம் கட்டும் பணி 15 மாத காலக்கெடு முடிந்தும் முடிக்கப்படாமல் அந்தரத்தில் நிற்கிறது. இதனால் போக்குவரத்து நெரிசல், தூசியில் சிக்கி மக்கள் அவதிப்படுவதை நேரில் பார்க்கும் அந்த தொகுதி சார்ந்த அமைச்சர் மவுனம் சாதிப்பது மர்மமாக உள்ளது. மதுரையில் போக்குவரத்து நெரிசலை தீர்க்க கோரிப்பாளையத்தில் பறக்கும் பாலமும், பைபாஸ் ரோடு காளவாசல் சந்திப்பில் உயர்மட்ட பாலமும் கட்டப்படும் என சட்டப்பேரவையில் 2013ல் அறிவிக்கப்பட்டது. இதில் கோரிப்பாளையம் பறக்கும் பாலம் 7 ஆண்டுகளாக கானல்நீராக நீடிக்கிறது. பைபாஸ் ரோட்டில் உயர்மட்ட பாலம் 5 ஆண்டுகள் இழுத்தடிப்புக்கு பிறகு ரூ. 54 கோடி 7 லட்சத்து 58 ஆயிரத்தில் மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. அதன்படி 2018 ஜூலை 15ல் பாலத்திற்கு அடிக்கல் நாட்டி பூமிபூஜையுடன் பணிகள் துவங்கின. நான்கு வழிப்பாதையாக 750 மீட்டர் நீளத்தில் பாலம் அமைகிறது. இந்த பணிகள் 15 மாதங்களில் முடிக்கப்படும் என கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அந்த அவகாசம் முடிந்து 3 மாதங்களுக்கு மேலாகியும், பணிகள் பாதி அளவுக்கே முடிந்து அந்தரத்தில் நிற்கிறது. ஒரு நாளில் ஒரு லட்சத்து 75 ஆயிரம் வாகனங்கள் கடக்கும் இந்த ரோட்டில் பாலம் கட்டும் பணி ஆமை வேகத்தில் நடப்பதால் அந்த பகுதி முழுவதும் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி திணறுகிறது. அதோடு தூசி கிளம்பி வாகனங்களில் செல்வோருக்கு மூச்சு முட்டுகிறது. பாலம் கட்டி முடிக்கும் பணி எப்போது முடிவடையும்? என்பதற்கான அறிகுறியும் தோன்றவில்லை.

இதுகுறித்து நெடுஞ்சாலை துறை பொறியாளரிடம் கேட்டால் ‘விரைவில் முடிந்துவிடும்’ என்று சொல்லி, அதற்கான நடவடிக்கை எதுவும் எடுக்காமல் பொறுப்பை தட்டிக்கழிக்கிறார்கள். இந்த பாலத்தை கட்டும் காண்டராக்ட் நிறுவனம் ஏற்கனவே மதுரையில் வைகை ஆற்றின் குறுக்கே மேம்பாலம் உள்ளிட்ட பல்வேறு பாலங்களை திட்டமிட்ட காலஅவகாசத்தில் வெற்றிகரமாக முடித்துள்ளது. ஆனால் பைபாஸ் ரோட்டில் நவீன தொழில் நுட்பங்களை கையாண்டும் இழுத்தடிப்புக்கு என்ன காரணம் என்பது இதுவரை தெரியாமல் உள்ளது. மேலும் இந்த பகுதி அமைச்சர் செல்லூர் ராஜூவின் சொந்த தொகுதியான மதுரை மேற்கில் அமைந்துள்ளது.  அவர் அடிக்கடி அங்கு வரும்போதெல்லாம் போக்குவரத்து நெரிசலில் சிக்குகிறார். மக்கள் படும் அவதியையும் நேரில் பார்க்கிறார். ஆனால் மேம்பால பணி ஏன் தாமதமாகிறது? என்பது குறித்து ஆய்வு நடத்தாமல் மர்மம் சாதிப்பது ஏன்? விரைவுபடுத்த ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என்ற கேள்வி அப்பகுதி சமூகஆர்வலர்கள், மக்கள் மத்தியில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

Tags : Half ,
× RELATED வெண்டைக்காய் பருப்பு சாதம்