×

இரட்டைப்பதிவு, இறப்பு தொடர்பாக நீக்குதல் ஆய்வு தீவிரம்

மதுரை, பிப். 7: மதுரையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்புக்கான பணிகளின் உச்சமாக இரட்டைப்பதிவு இறப்பு தொடர்பாக நீக்குதல் பணிகளுக்கான ஆய்வினை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த ஆண்டுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வரும் பிப். 14ம் தேதி வெளியிடப்படுகிறது. தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்தாண்டு டிச.23ம் தேதி வெளியிடப்பட்டது. அதில் மதுரை மாவட்டத்தில் ஆண்கள் 12 லட்சத்து 76 ஆயிரத்து 784 பேர், பெண்கள் 13 லட்சத்து 12 ஆயிரத்து 40 பேர், மூன்றாம் பாலினம் 157 பேர் என மொத்தம் 25 லட்சத்து 88 ஆயிரத்து 981 வாக்காளர்கள் உள்ளனர். 2020 ஜன.1ம் தேதியில் 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் புதிய வாக்காளராக சேர்க்க புதிதாக படிவம் -6 பெறப்பட்டது. மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதியில் 2,716 வாக்குச்சாவடிகளில் நடந்த முகாமில் 18 வயது முதல் 24 வயது வரையிலான இளைஞர்கள் மிகவும் ஆர்வத்துடன் விண்ணப்பித்தனர். அரசியல் கட்சியினரும் புதிய வாக்காளர்–்களை ஆர்வத்துடன் அழைத்து வந்து விண்ணப்பிக்க வைத்தனர்.இதற்காக 2வது கட்ட சிறப்பு முகாம் நடந்தது. மேலும் இதற்கான படிவம் கடந்தாண்டு டிச.23 முதல் ஜன.22ம் தேதி வரை பெறப்பட்டது. புதிய வாக்காளராக சேர படிவம் -6ஐ, 59 ஆயிரத்து 255 பேரும், பெயர் நீக்க கோரி, படிவம் -7ஐ 7ஆயிரத்து 204 பேரும், பெயர், முகவரி திருத்தம் கோரி, படிவம் -8ஐ 3 ஆயிரத்து 225 பேரும், ஒரே தொகுதியில் முகவரி மாற்றி தரக்கோரி 4 ஆயிரத்து 262 பேர் என மொத்தம் 73 ஆயிரத்து 946 மனுக்கள் பெறப்பட்டது.

இந்த மனுக்கள் அனைத்தும், தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. பதிவு செய்த மனு மீது 2 ஆயிரத்து 714 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் இரட்டை பதிவு, இறப்பு தொடர்பாகவும் ஆய்வு செய்து வாக்காளர்களை நீக்கி வருகின்றனர். இந்த பணி அனைத்து சட்டமன்ற தொகுதியிலும் நடந்து வருகிறது. நேற்று மதுரை மேற்கு தாலுகாவிற்கு உட்பட்ட விளாச்சேரியில் நடந்த பணியினை கலெக்டர் வினய் ஆய்வு செய்தார். புதிதாக விண்ணப்பித்தவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்த கலெக்டர், விண்ணப்பித்தவர்களை முறையாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும். எந்த முறைகேடும் நடக்க கூடாது என அதிகாரிகளை கேட்டு கொண்டார்.இந்த ஆய்வில் தாசில்தார் கோபி, தேர்தல் துணை தாசில்தார் மஸ்தான் கனி, வருவாய் ஆய்வாளர் லதா, கிராம நிர்வாக அலுவலர் சுந்தரபாண்டி மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் இருந்தனர். இந்தாண்டுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 14ம் தேதி வெளியிடப்படும்.

Tags : death ,
× RELATED தொழிலாளி அடித்துக் கொலை: எஃப்.ஐ.ஆரில் மருத்துவமனையை சேர்க்க வலியுறுத்தல்