கடும் பனி, குளிரால் மடியும் வாத்து குஞ்சுகள்

சின்னமனூர், பிப்.7: கம்பம் பள்ளத்தாக்கில் முல்லைப் பெரியாறு பாசனத்தின் கீழ் சுமார் 15 ஆயிரம் ஏக்கரளவில் வருடத்தில் இரு போகம் நெல் சாகுபடி விவசாயம் நடந்து வருகிறது. இதனைக் கருத்தில் கொண்ட கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்கள் லட்சக்கணக்கான வாத்து குஞ்சுகளை தமிழ்நாடு, ஆந்திரா கர்நாடகா போன்ற மாநிலங்களில் நெல் அறுவடை முடிந்த நேரத்தில் மேய்க்க கொண்டு வருகின்றனர்.இதன்படி மூன்று மாநிலங்களிலுள்ள விவசாயிகள் மற்றும் வியாபாரிகளிடம் தலா 500 வாத்து குஞ்சுகள் வீதம் ஒப்படைக்கின்றனர். இவர்கள் பல பிரிவுகளாக 3 மாநிலங்களிலும் பிரிந்து ஆற்றோரம் மற்றும் அறுவடை வயல் வெளிகளில் கூடாரம் அமைந்து ஒரு மாதத்திற்கும் மேலாக தங்கி வாத்துகளை வளர்க்கின்றனர். அதன்படி தற்போது தேனி மாவட்டப் பகுதிக்கு வாத்து குஞ்சுகளுடன் அவர்கள் வந்துள்ளனர்.தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கிலுள்ள வீரபாண்டி, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம், கூடலுர் வரையில் கேரளா வாத்து குஞ்சுகளை வளர்ப்பவர்கள் குவிந்துள்ளனர். அதற்காக பொதுப்பணித் துறையினரும் வாத்து குஞ்சுகளை வளர்ப்பதற்கு பெரிய வாய்க்கால்களில் தண்ணீர் திறந்து விட்டுள்ளனர். அந்த தண்ணீரை அறுவடை வயல்வெளிகளில் தண்ணீர் எடுத்து விட்டு பாதியளவு நிரப்பியுள்ளனர். இந்த வாத்து குஞ்சுகள் வயல்வெளிகளில் உதிர்ந்துள்ள நெல் மணிகளை உணவாக உட்கொள்கின்றன.தற்போது தை மாதம் என்பதால் பகல் மற்றும் இரவு நேரங்களில் பனிப்பொழிவும், கடும் குளிரும் வீசி வருவதால் அதனைத் தாங்க முடியாமல் வாத்து குஞ்சுகள் மடிந்து வருகின்றன. இதனால் தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதனால் வாத்து வளர்ப்பவர்கள் கவலையடைந்துள்ளனர். இதனால் குறிப்பிட்ட மாதத்திற்குள் கேரளாவிற்கு வாத்துகளை வளர்த்து ஒப்படைக்க முடியாத நிலையில் தவித்து வருகின்றனர். கேரளாவில் இறைச்சிக்காகவும், முட்டைக்காகவும் வாத்துகள் அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றன.

Related Stories:

>