×

உள்ளாட்சி பிரதிநிதிகள் அதிர்ச்சி மாவட்ட ஊராட்சி கணக்கில் ‘0’ பேலன்ஸ் மக்களின் குறைகளை தீர்ப்பது எப்படி?

திண்டுக்கல், பிப்.7: மாவட்ட ஊராட்சியில் நிதி இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளதால் உள்ளாட்சி பிரதிநிதிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.திண்டுக்கல் ஊரக வளர்ச்சித் துறை அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஊராட்சி தலைவர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பொன்ராஜ், செயலாளர் அகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் (பொது) தீர்மான கடிதம் அனுப்பப்பட்டது. அதில், ஊராட்சி வளர்ச்சிப் பணிகளுக்காக கடந்த 1.4.2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை ரூ.12 கோடியே 45 லட்சத்து 5 ஆயிரத்து 857 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் 27.11.2019 முதல் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் விதிமுறை அமலாக்கப்பட்டது. 11.1.2020 வரை தேர்தல் விதிமுறை அமலில் இருந்தது. இதையடுத்து தேர்தல் முடிந்து மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டு ஊராட்சி குழு அமைக்கப்பட்டது. அக்டோபர் 2019 எஸ்.எப்.சி நிதியினை திட்ட அலுவலர் மற்றும் தனி அலுவலர் என்ற முறையில் கையாளலாம். ஆனால் நவம்பர் 2019 முதல் மார்ச் 2020 வரையான எஸ்.எப்.சி நிதியினையும் சேர்த்து நிர்வாக அனுமதி பெற்று டெண்டர் விடப்பட்டுள்ளது.

இதனால் மாவட்ட ஊராட்சியில் எஸ்.எப்.சி நிதி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல இயக்குனர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணைப்படி 6.8.2019 அன்று ரூ.10 கோடியே 99 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உத்தரவு வரப்பெற்றது. இதுநாள் வரை அந்த நிதி மாவட்ட ஊராட்சி கணக்கில் வரவு வைக்காமலே 24.9.2019 அன்று திண்டுக்கல் மாவட்ட கலெக்டரால் ரூ.10 கோடியே 99 லட்சத்திற்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு டெண்டர் விடப்பட்டுள்ளது.
மேலும் எஸ்.எப்.சி நிதி மற்றும் சி.ஜி.எப் நிதி மாவட்ட ஊராட்சி கணக்கில் ஒரு பைசா கூட இல்லாத நிலை உள்ளது. எனவே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் மக்கள் குறைகளை தீர்ப்பதற்கு மாவட்ட ஊராட்சியிலிருந்து எஸ்.எப்.சி நிதியிலிருந்து விடப்பட்ட டெண்டரையும், சி.ஜி.எப் நிதியிலிருந்து விடப்பட்ட டெண்டரையும் ரத்து செய்து, அந்த நிதியினை மாவட்ட ஊராட்சி கணக்கில் வரவு வைத்து, மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களின் பரிந்துரையின்படி நிர்வாக அனுமதி வழங்கிட மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கலெக்டருக்கு தெரிவிக்கப்படுகிறது என்று கூறப்பட்டிருந்தது.

Tags : Representatives ,
× RELATED ஆந்திராவில் ரோஜாவுக்கு எதிர்ப்பு...