×

உடல் உறுப்பு தானம் அளிக்க உறவினர்கள் முன்வர வேண்டும்

கோவை, பிப். 7: உடல் உறுப்பு தானம் அளிக்க உறவினர்கள் முன்வர வேண்டும் என கோவை அரசு மருத்துவமனையின் டீன் அசோகன் தெரிவித்துள்ளார். கோவை  அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த கோத்தகிரி பகுதியை சேர்ந்த  சிவபெருமாள் என்பவரிடம் இருந்து முதல் முறையாக உடல் உறுப்பு தானம்  பெறப்பட்டது. இவரிடம் இருந்து எடுக்கப்பட்ட கல்லீரல், சிறுநீரகங்கள் நோயாளிகளுக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளது. இது  குறித்து கோவை அரசு மருத்துவமனையின் அசோகன் நேற்று செய்தியாளர்களிடம்  கூறியதாவது: கோவை அரசு மருத்துவமனையில் கடந்த மூன்று ஆண்டுகளில் 23  பேருக்கு ரத்த சம்பந்தப்பட்ட உறவினர்களிடம் இருந்து சீறுநீரகம் தானமாக  பெறப்பட்டு, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.  இந்நிலையில், முதல் முறையாக தற்போது மூளைச்சாவு அடைந்த  நபரிடம் இருந்து 2 சிறுநீரகம், கல்லீரல் தானமாக பெறப்பட்டு காத்திருப்பு பட்டியலில் இருந்த நபர்களுக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளது.  மூன்று பேர்  மறுவாழ்வு பெற்றுள்ளனர். இதில், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு தனியார்  மருத்துவமனைகளில் ரூ.40 லட்சம் வரையும், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு ரூ.15 லட்சம் வரை செலவாகும்.

ஆனால்,  கோவை அரசு மருத்துவமனையில் இலவசமாக செய்யப்பட்டுள்ளது. கண்கள், தோல் எடுக்க உறவினர்கள் விருப்பம் தெரிவிக்கவில்லை. மேலும், அவரின் இதயம் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது. கோவை அரசு மருத்துவமனையில் ஒவ்வொரு மாதமும் 10 பேர் வரை மூளைச்சாவு அடைகின்றனர். தற்போது வரை மூளைச்சாவு  அடைந்த 100 பேரிடம் இருந்து உடல் உறுப்புகள் பெற முயற்சி செய்தோம். இதில், 10 பேர் தானம் செய்ய முன் வந்தனர். பல்வேறு காரணங்களினால் அவர்களின் உறுப்புகளை எடுக்க முடியவில்லை. கோவை அரசு மருத்துவமனையில் மட்டும் சிறுநீரக காத்திருப்பு பட்டியலில் 30 பேரும், கல்லீரல் காத்திருப்பு பட்டியலில் 3 பேரும் உள்ளனர். இதனால், மூளைச்சாவு அடையும் நபரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய உறவினர்கள் முன்வர வேண்டும். சிலர் மத ரீதியான நம்பிக்கையின் காரணமாக உறுப்புகளை தானம் செய்ய முன்வருவதில்லை. இந்த நிலையை மாற்ற வேண்டும். உடல் உறுப்பு தானம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். மேலும், உடல் உறுப்பு தானம் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்த மருத்துவ கண்காணிப்பாளர் சடகோபன், உதவி இருப்பிட மருத்துவர் பொன்முடி செல்வன், மயக்கவியல் துறை தலைவர் சாந்தா அருள்மொழி, சிறுநீரக மருத்துவர் தினகரன் பாபு, சிறுநீரகவியல் துறை டாக்டர் பிரபாகரன், வாஸ்குலர் சர்ஜன் வடிவேல், நரம்பியல் துறை மோசஸ் மூர்த்தி, துரைராஜ், பாலமுருகன், ஒருங்கிணைப்பாளர் நிஷாந்த் ஆகியோரை மருத்துவமனை டீன் பாராட்டினார்.

Tags : Relatives ,
× RELATED குடும்பத்துடன் சுற்றுலா சென்றபோது...