×

இலவச மின்சாரத்தை ரத்து செய்தால் தமிழகம் முழுவதும் போராட்டம்

கோபி, பிப்.7: இலவச மின்சாரத்தை ரத்து செய்தால் தமிழகம் முழுவதும் விவசாயிகளை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.  கோபியில் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் சார்பில், உழவர் பெருந்தலைவர் நாராயணசாமியின் 96வது பிறந்தநாள் விழா நேற்று நடந்தது. இதில், கலந்து கொண்ட மாநில பொருளாளர் தங்கராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:மத்திய அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கையில் விவசாயத்திற்கு கொண்டு வந்த 15 அம்ச திட்டத்தில் ஒன்றுகூட விவசாயிகளுக்கு பயன்தராது. மறைந்த தி.மு.க. முன்னாள் தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது, விவசாயிகளையும், மின்வாரிய அதிகாரிகளையும் அழைத்து பேசினார். அப்போது, இலவசமாக தண்ணீர் வழங்கினால்தான் விளைபொருட்களை குறைந்த விலைக்கு விற்க முடியும் என்று கூறியதையடுத்து உடனடியாக இலவச மின்சார திட்டத்தை கொண்டு வந்தார். இந்த மின்சாரத்தை 20 லட்சம் விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். அதை சீர்குலைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 58 உயிர்களை பலி கொடுத்து பெற்றதுதான் இலவச மின்சாரம். இதை ரத்து செய்தால் தமிழகம் முழுவதும் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவோம்.

ஒவ்வொரு நிதிநிலை அறிக்கையின்போதும் கருணாநிதி விவசாயிகளை அழைத்து பேசிய பின்னரே நிதிநிலை அறிக்கை தயாரிப்பார். ஆனால், தற்போதுள்ள அரசு இதுவரை விவசாயிகளை அழைத்து பேசவில்லை. அவர்களுக்கு தேவையான சிலரை அழைத்து பேசிவிட்டு நிதி நிலை அறிக்கையை தயாரிக்கின்றனர்.அதேபோல், கெயில் திட்டத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தபோது அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உடனடியாக விவசாயிகளை அழைத்து பேசினார். அதைத்தொடர்ந்து, அடுத்த நாளே சட்டசபையில் கெயில் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்தக்கூடாது என்று கூறினார். இவர்களை போன்று விவசாயிகளை அழைத்து பேசும்  நிலைமை தற்போது இல்லை. இதேநிலை தொடர்ந்தால் விவசாயிகளை திரட்டி போராடுவோம். இவ்வாறு அவர் கூறினார். மாநில தலைவர் சண்முகம், நிர்வாகிகள் நஞ்சப்பன், சுபி தளபதி, சிவராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : cancellation ,Tamil Nadu ,
× RELATED தமிழ்நாட்டில் ஏப். 13-ம் தேதி முதல்...