×

தாளவாடி மலைப்பகுதியில் முட்டைகோஸ் விலை கடும் வீழ்ச்சி

சத்தியமங்கலம், பிப்.7: முட்டைகோஸ் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் கிலோ ரூ.3க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால், தாளவாடி மலைப்பகுதியில் முட்டைகோஸ் பயிரிட்டுள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதி கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2500 அடி உயரத்தில் உள்ளதால் குளிர்ந்த தட்பவெப்பநிலை நிலவுகிறது. இதனால், இப்பகுதி விவசாயிகள் உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், முள்ளங்கி, முட்டைகோஸ், பீட்ருட் உள்ளிட்ட காய்கறிகள் பயிரிடுகின்றனர்.இங்கு விளையும் காய்கறிகள் மேட்டுப்பாளையம், கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் கேரள மாநிலங்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
தாளவாடி சுற்று வட்டார கிராமங்களான எரஹனள்ளி, திகினாரை, ஜீரஹள்ளி, கல்மண்டிபுரம், அருள்வாடி, கெட்டவாடி, தமிழ்புரம், நெய்தாளபுரம், தலமலை உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நீலகிரி, சேன்டேஸ், கணேஸ் போன்ற பல்வேறு ரக கோஸ் சாகுபடி செய்துள்ளனர்.

தற்போது, முட்டைகோஸ் கிலோ ரூ.3க்கு வியாபாரிகள் வாங்கிச்செல்வதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 3 மாத கால பயிரான முட்டைகோஸ் ஒரு ஏக்கருக்கு 25,000 முதல் 30,000 நாற்றுக்கள் நடவு செய்யப்படுகிறது. உழவுக்கூலி, நடவுப்பணி, களையெடுத்தல், பூச்சி மருந்து தெளித்தல், உரமிடுதல் உள்ளிட்ட பணிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.45,000 செலவாகிறது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ ரூ.7 முதல் 8 வரை விற்பனையானது. இதனால், விவசாயிகளுக்கு ஓரளவு லாபம் கிடைத்தது. இந்நிலையில், முட்டைகோஸ் சாகுபடி பரப்பு அதிகரித்தால் விளைச்சல்அதிகரித்ததன் காரணமாக விலை வீழ்ச்சியடைந்தது. தற்போது வியாபாரிகள் ஒரு கிலோ முட்டைகோஸ் ரூ.3க்கு விலை பேசி வாங்கி செல்கின்றனர். இதனால், முட்டைகோஸ் பயிரிட்டுள்ள விவசாயிகள் செலவினத்தொகை கூட ஈட்டமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மலைகிராமங்களில் முட்டைகோஸ் சாகுபடி செய்யும் பரப்பளவு அதிகம் என்பதோடு விளைச்சல் காரணமாக விலை வீழ்ச்சியடைந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags :
× RELATED கொடிவேரி அணை அருகே பவானி ஆற்றில் மூழ்கி 2 பேர் பலி