ரேஷன்கடை மாற்றத்திற்கு எதிர்ப்பு நாங்குநேரி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

நாங்குநேரி, பிப்.7: நாங்குநேரியில் ரேஷன்கடை மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒன்றிய அலுவலகத்தை கிராமமக்கள் முற்றுகையிட்டனர்.நாங்குநேரி ஒன்றியம் பதைக்கம் கிராமத்தில் நடந்து வரும் வெள்ளத்தடுப்புக் கால்வாய் பணிகளுக்காக அங்கு செயல்பட்டு வந்த ரேஷன்கடை அகற்றப்பட்டது. இந்த கடையில்  பதைக்கம் மற்றும் பார்ப்பரம்மாள்புரம் ஆகிய கிராம மக்கள் பொருட்கள் வாங்கி வந்தனர்.  தற்போது இரு கிராமங்களுக்கும் இடையே பொதுவான இடத்தில் புதிய ரேஷன்கடை கட்ட அதே ஊரைச் சேர்ந்தவர்கள் நன்கொடையாக நிலம் அளித்தனர். அந்நிலத்தில்  அரசின் சார்பில் புதிய கட்டிடம் கட்டும் பணி துவங்கியது.  இந்நிலையில் புதிய கடையை தங்கள் பகுதியில் அமைக்க வேண்டும் என பார்ப்பரம்மாள்புரத்தைச் சேர்ந்த பொது மக்கள் கோரிக்கை விடுத்ததால் குழப்பம் ஏற்பட்டு புதிய ரேஷன்கடை கட்டும் பணி தாமதமானது. இதனையடுத்து ஏற்கனவே திட்டமிட்டபடி புதிய ரேஷன்கடை கட்டிடத்தை தங்கள் ஊரிலேயே அமைக்க வேண்டும் என வலியுறுத்தி பதைக்கம் கிராம மக்கள் 50க்கும் மேற்பட்டோர் நாங்குநேரி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.   இதையடுத்து நாங்குநேரி ஒன்றிய கிராம ஊராட்சி ஆணையாளர் குமரன், கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி பதைக்கம் கிராமத்திலேயே திட்டமிட்டப்படி புதிய ரேஷன்கடை கட்டப்படும் என உறுதிஅளித்தார். இதைத் தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Stories:

>