×

நெல்லை அரசு மருத்துவமனையில் இருந்து மாயமான இளம்பெண் கதி என்ன?

நெல்லை, பிப்.7: நெல்லை அரசு மருத்துவமனையில் சரணாலயத்தை சேர்ந்த வாய்பேச முடியாத இளம்பெண் மாயமாகி 10 நாட்களாகியும் அவரை பற்றி துப்புதுலக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியில் கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு வடமாநிலத்தை சேர்ந்த இளம்பெண் சுற்றி திரிந்தார். அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் அவரை நாங்குநேரி ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்தனர். அங்குள்ள காப்பாளர்கள் இளம்பெண்ணிடம் விசாரித்தபோது வடமாநிலத்தை சேர்ந்த பிருந்தா(23) எனவும், வாய் பேச முடியாத தனக்கு பெற்றோர் இல்லை என்பதை செய்கை மூலம் தெரிவித்தார். இதனையடுத்து அங்கு தங்கியிருந்து தனக்கு தெரிந்த வேலையை செய்து வந்தார். நாங்குநேரி ஆதரவற்றோர் இல்ல காப்பாளர்களின் ஏற்பாட்டின் பேரில் கடந்த 6மாதங்களுக்கு முன்பு நெல்லை சந்திப்பு பாலபாக்யா நகரிலுள்ள சரணாலயத்தில் தத்துமைய ஒருங்கிணைப்பாளராக பிருந்தா(23) வேலைக்கு சேர்ந்தார். இந்நிலையில் சரணாலயத்தில் உடல் நலமில்லாத இரு குழந்தைகள் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு உதவியாக பிருந்தா இருந்தார்.கடந்த மாதம் 29ம்தேதி மாலையில் அவர் நெல்லை அரசு மருத்துவமனையிலிருந்து திடீரென மாயமானார். சரணாலய நிர்வாகிகள், ஊழியர்கள் அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து சரணாலய தத்துமைய ஒருங்கிணைப்பாளர் முகமதி(30) பாளை ஐகிரவுண்ட் மருத்துவமனை காவல்நிலையத்தில் கடந்த மாதம் 30ம்தேதி புகார் செய்தார். இதன் பேரில் இன்ஸ்பெக்டர் ஜென்சி, எஸ்ஐ நாராயணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து பிருந்தாவிடம் யாரேனும் கடத்தி சென்றனரா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.மாயமான பிருந்தா சிலுவையுடன் கூடிய செயின் அணிந்துள்ளார். நீளமான முகம், கறுப்பு நிறம், இடது கை மணிக்கட்டுக்கு மேல் மீன் போன்றும், வலது கை பெருவிரல் அருகே பிறை போன்றும் பச்சை குத்தியிருந்தார். அவரை கண்டுப்பிடிக்க இன்ஸ்பெக்டர் ஜென்சி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும், இவரை பற்றி தெரிய வந்தால் ஐகிரவுண்ட் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்குமாறு போலீசார் தெரிவித்தனர். பணி நெருக்கடி காரணமாக தனிப்படையினர் விசாரணை மந்தகதியில் செல்வதால் துப்புதுலக்க முடியாமல் திணறி வருகின்றனர். மாயமாகி பத்து நாட்களாகியும் அவரது கதி என்ன? என்பது கேள்விக்குறியாக உள்ளது.

Tags : Paddy Government Hospital ,
× RELATED நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை...