×

திருக்குறுங்குடியில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

களக்காடு, பிப்.7:திருக்குறுங்குடி பகுதியின் முக்கிய தொழில் விவசாயம் ஆகும். இங்குள்ள பெரும்பான்மையான மக்கள் விவசாயத்தை நம்பியே பிழைப்பு நடத்தி வருகின்றனர். திருக்குறுங்குடி சுற்று வட்டாரத்தில் கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் விவசாயிகள் நெற்பயிர் பயிரிட்டிருந்தனர். தற்போது இயந்திரங்களின் மூலம் அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. கடந்த ஆண்டை காட்டிலும் நெல் அதிகளவில் அறுவடை செய்யப்பட்டாலும். போதிய விலையின்றி விவசாயிகள் பாதிப்பு அடைந்துள்ளனர். திருக்குறுங்குடியில் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படாததால் வியாபாரிகளிடமே நெல்லை விற்க வேண்டிய கட்டாய நிலை நிலவுகிறது. 150 கிலோ சிறிய ரக நெல்  ரூ.2 ஆயிரத்திற்கும், பெரிய ரக நெல் ரூ.2,200க்கும் விற்பனையாகிறது. இது விவசாயிகளுக்கு போதுமானதாக இல்லாததால் பெருமளவில் இழப்பும் ஏற்படுகிறது. நெல் அறுவடை இயந்திரத்தின் வாடகை ஒரு மணிக்கு ரூ.2,200 லிருந்து ரூ.3,000 வரை கொடுக்க வேண்டியதுள்ளது. மேலும் இடு பொருட்கள் செலவுகளை காட்டிலும் குறைவான தொகையை கிடைப்பதாக விவசாயிகள் கவலை அடைந்தனர்.
 எனவே விவசாயிகளின் நலன் கருதி திருக்குறுங்குடியில் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க விவசாயிகள் வலியுறுத்தினர்.

இதுகுறித்து பிப்.1ம் தேதி தினகரனில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து தமிழக அரசின் நுகர்பொருள் வாணிபகழகத்தின் சார்பில் திருக்குறுங்குடியில் நேற்று கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. நிகழ்ச்சியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் பெரும்படையார், நுகர்பொருள் வாணிப கழக ஊழியர் முத்துக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர். ஏராளமான விவசாயிகள் மூடை, மூடையாக நெல்லை கொண்டு வந்து விற்பனை செய்தனர்.  இங்கு 100 கிலோ பெரிய ரக நெல் அரசின் ஊக்கத்தொகை சேர்த்து ரூ.1,865க்கும், சிறிய ரக நெல் ரூ.1,905க்கும் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.  இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொள்முதல் நிலையத்திற்கு நெல்லை கொண்டு வரும் விவசாயிகள் பட்டா அடங்கல் நகல், ஆதார் கார்டு நகல், வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும் என்றும், அவர்களது வங்கி கணக்கில் 3 நாட்களில் நெல்லுக்குரிய பணம் செலுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் பெரும்படையார் கூறுகையில், திருக்குறுங்குடியில் நிரந்தரமாக நெல் கொள்முதல் நிலையம்  அமைக்க வேண்டும் என்றார்.

Tags : Opening ,Paddy Purchase Center ,Thirukkurunkudi ,
× RELATED திருச்செந்தூரில் தண்ணீர் பந்தல் திறப்பு