×

ஏர்வாடியில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த வீரராகவ பெருமாள் கோயிலில் இன்று மகா கும்பாபிஷேகம்

ஏர்வாடி, பிப். 7: ஏர்வாடியிலுள்ள வீரராகவ பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது. ஏர்வாடியில் உள்ள வீரராக பெருமாள் கோயில் சுமார் 300 ஆண்டுகள் பழமையானது. அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. டிவிஎஸ் வேணுகோபால் அறக்கட்டளை மற்றும் பொதுமக்கள் இணைந்து கும்பாபிஷேகத்திற்கான பணிகளை செய்தனர். இதையடுத்து இன்று காலை 9 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதற்காக நேற்று முன்தினம் மாலை கணபதி ஹோமத்துடன் முதல் யாகசாலை பூஜை ஆரம்பித்தது. மாலை 5மணி முதல் 10 மணி வரை மங்கள இசை, அனுக்ஞை, புண்யாகம், கும்பபூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது. நேற்று காலை 2வது யாகசாலை பூஜை காலை 9 மணி முதல் 12 மணி வரை பிம்பசுத்தி, யுக்தஹோமம், பூர்ணாகுதி, தீபாராதணை நடைபெற்றது. 3வது யாக சாலை பூஜை மாலை 6 மணி முதல் 10 மணி வரை நடைபெற்றது. இன்று காலை 7 மணிக்கு 4வது கால யாகசாலை பூஜையுடன் ஆரம்பித்து 9 மணிக்கு மூலவர் விமானம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. காலை 11 மணிக்கு அன்னதானமும், இரவில் சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெறும்.நிகழ்ச்சிக்கு திருக்குறுங்குடி ஜீயர் ராமானுஜ சுவாமிகள் தலைமை வகிக்கிறார். நெல்லை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்ஜோதி, உதவி ஆணையர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். ஏர்வாடி திருவழுதீஸ்வரர் திருக்கோயில் செயல் அலுவலர் முருகன், நான்குநேரி சரக ஆய்வாளர் தனலெட்சுமி , ஏர்வாடி திருவழுதீஸ்வரர் திருக்கோயில் தக்கார் வெங்கடேஸ்வரி, டிவிஎஸ் நிர்வாக அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்கின்றனர்.

Tags : warrior ,Airwadi ,Perumal Temple ,
× RELATED ராமச்சந்திர பெருமாள் கோயிலில்...