×

போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாயர்புரம்-சிவத்தையாபுரம் சாலை

ஏரல், பிப்.7: சாயர்புரத்தில் இருந்து சிவத்தையாபுரம் வரை குண்டும், குழியுமாக இருந்து வந்த சாலை மழையால் மேலும் பழுதடைந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற சாலையாக மாறி உள்ளது. இந்த சாலையை உடனடியாக அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரத்தில் தனியார் பொறியியல் கல்லூரி, கல்வியல் கல்லூரி, ஆர்ட்ஸ் சயின்ஸ் கல்லூரி மற்றும் மாணவர்கள், மகளிர்களுக்கு தனித்தனி மேல்நிலைப் பள்ளிகள் உட்பட பல தொடக்கப்பள்ளிகளும் உள்ளன. இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட சுற்று வட்டார கிராமங்களில் இருந்து பல ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் கல்வி படிப்பதற்காக தினமும் சாயர்புரம் வந்து செல்கின்றனர். ஆனால் இங்குள்ள முக்கிய சாலையான சாயர்புரத்தில் இருந்து சிவத்தையாபுரம் செல்லும் சாலை குண்டும், குழியுமாக இருந்து வந்தது. மழையினால் இந்த சாலையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றதால் மேலும் பல இடங்களில் அரிப்பு ஏற்பட்டு சாலை படுமோசமாக உள்ளது. இதனால் இந்த சாலையில் வாகனங்கள் தட்டிதடுமாறி சென்று வருகிறது. குறிப்பாக நடுவக்குறிச்சி வளைவு ரோடு, புளியநகர் அருகில் உள்ள திருமண மண்டபம் முன்பு உள்ள சாலைகளில் ஏற்பட்டுள்ள படுகுழியில் வாகனங்கள் சிக்கி விபத்துக்குள்ளாகி வருகிறது. எனவே பொதுமக்கள் மாணவ, மாணவிகள் நலன் கருதி சாயர்புரத்தில் இருந்து சிவத்தையாபுரம் செல்லும் சாலையை உடன் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : road ,Saiyapuram-Sivathayapuram ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி