×

புதுவையில் 9.76 லட்சம் வாக்காளர்கள்

புதுச்சேரி, பிப். 7: புதுவையில் 9.75 லட்சம் வாக்காளர்கள் உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.  புதுச்சேரி மாநில தலைமை தேர்தல் அதிகாரி சுர்பிர் சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கிணங்க 1.1.2020ஐ தகுதி பெறும் தேதியாக கொண்டு, புதுச்சேரி ஒன்றிய ஆட்சி பரப்பில் அடங்கிய 30 சட்டமன்ற தொகுதிகளின் 2020ம் ஆண்டிற்கான புகைப்பட வாக்காளர் பட்டியல் சுருக்குமுறை திருத்தப் பணி கடந்த டிசம்பர் 16ம் தேதி முதல் ஜன.15ம் தேதி வரை நடைபெற்றது. இறுதி வாக்காளர் பட்டியல் இன்று (7ம் தேதி) வெளியிடப்படுகிறது. இந்த சுருக்குமுறை திருத்த பணியின்போது வாக்காளரிடமிருந்து பெறப்பட்ட உரிமை கோரிக்கைகளையும், ஆட்சேபனைகளையும், அவற்றின் மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் பற்றிய விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

கடந்த டிசம்பர் 16ம்தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி ஆண்கள் - 4,52,816, பெண்கள் - 5,08,649, மூன்றாம் பாலினம் - 93 என மொத்தம் 9,61,558 வாக்காளர்கள் இருந்தனர். பெயர் சேர்ப்பதற்காக ஆண்கள் - 7,552, பெண்கள் - 8,867, மூன்றாம் பாலினத்தவர் - 5 என மொத்தம் 16,424 பேரிடம் விண்ணப்ப படிவம் பெறப்பட்டு, அனைவரது விண்ணப்பமும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்றுள்ளதற்கு ஆட்சேபனை தெரிவித்து ஆண்கள் - 956, பெண்கள் - 1,212 என மொத்தம் 2,168 பேரிடம் படிவங்கள் பெறப்பட்டு, அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

வரைவு வாக்காளர் பட்டியலின்படி மொத்தம் 9,61,558 பேர் இடம் பெற்றிருந்தனர். அதில் 16,424 பேர் (1.71 சதவீதம்) சேர்க்கப்பட்டனர். 2,168 பேர் (0.21 சதவீதம்) நீக்கப்பட்டனர். இன்று வெளியிடப்படும் இறுதி வாக்காளர் பட்டியலின் படி புதுச்சேரி - 7,51,971, காரைக்கால் - 1,56,751, மாகே - 30,311, ஏனாம் - 36,781 என மொத்தம்  9,75,814 வாக்காளர்கள் இடம் பெறுகின்றனர். இறுதி வாக்காளர் பட்டியல் இன்று (7ம் தேதி) வெளியிடப்பட்டு
7 நாட்களுக்கு (பொது விடுமுறை நாட்கள் தவிர்த்து) அனைத்து வாக்குச்சாவடிகளிலும், வாக்காளர் பதிவு அதிகாரி, உதவி வாக்காளர் பதிவு அதிகாரிகளின் அலுவலகங்களிலும் பொது மக்களின் பார்வைக்காக வைக்கப்படும். புதியதாக பதிவு செய்த 18 - 19 வயது மற்றும் 20 வயதுக்கு மேற்பட்ட புதிய வாக்காளர்களுக்கு இன்று முதல் வாக்காளர் புகைப்பட அட்டை வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : voters ,New Delhi ,
× RELATED பெரும்புதூர் நாடாளுன்ற தொகுதியில்...