×

அரசு மகளிர் கலைக்கல்லூரியில் கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம்

புதுக்கோட்டை, பிப். 7: புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. கலெக்டர் உமாமகேஸ்வரி தலைமை வகித்தார். தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய தலைவர் வைரமுத்து முன்னிலை வகித்தார். பிரசாரத்தை துவக்கி வைத்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது: கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை மற்றும் பாதுகாப்பு வழிமுறை குறித்து தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸை தடுக்கும் வகையில் ஒவ்வொருவரும் தினமும் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளான ஒரு நாளைக்கு 15 முறை கை கழுவுதல், இருமல், தும்மலின்போது முகத்தை மூடி கொண்டு தும்முதல், தன் சுத்தம் பேணுதல் போன்ற முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதேபோன்று தமிழகத்தில் முதல்முறையாக கைகழுவும் முறை குறித்து மருத்துவர்கள் மூலம் மாணவர்களுக்கு மாதிரி செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. கொரோனா வைரஸ் இருமல், தும்மல் மூலம் வெளிப்படும் நீர் திவலைகள் மூலம் 20 சதவீதமும், இதனால் பரவிய நீர் திவலைகள் பட்ட இடங்கள் மற்றும் பொருட்களை பிறர் தொடுதல் உள்ளிட்ட ஏனைய காரணங்களின் மூலம் 80 சதவீதமும் பரவும். இதுவரை தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களுக்கு வந்து இறங்கிய 13,112 பயணிகளுக்கு முழுமையான மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதில் நோய் தொற்று பரவியுள்ள நாடுகளிலிருந்து வந்துள்ள 1,353 பேர் தொடர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். தமிழகத்தில் இதுவரை எவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. எனவே பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றார்.மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், அரசு மகளிர் கலைக்கல்லூரி முதல்வர் புவனேஸ்வரி, ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் சந்திரசேகரன், வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி, பொது சுகாதார துணை இயக்குனர் அர்ஜூஜீன்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : Corona Antivirus Awareness Campaign ,Government Women's College ,
× RELATED புலியகுளம் அரசு மகளிர் கல்லூரியில் 2-ம் கட்ட கவுன்சலிங் ஜூன் 28-ல் நடக்கிறது