×

கொள்ளிடம் ஆற்றில் இருந்து சவுடு மணல் கடத்திய 5 லாரிகள் பறிமுதல்

காட்டுமன்னார்கோவில், பிப். 7: காட்டுமன்னார்கோவில், நாகை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் இருந்து அனுமதியின்றி சவுடு மணல் கடத்தி சென்ற 5 லாரிகளை போலீசார் அதிரடியாக மடக்கி பிடித்து பறிமுதல் செய்தனர். காட்டுமன்னார்கோவில் கொள்ளிடம் ஆற்றில் இருந்து சவுடு மணல் கடத்தப்படுவதாக அடிக்கடி ரகசிய தகவல்கள் வெளியாகி வந்தன. இதில் ஆளும் கட்சியினருக்கும் அதிலிருந்து விலகிய சிலருக்கும் தொடர்பு இருந்து வருவதாக பொதுமக்கள் மத்தியில் கூறப்பட்டு வந்த நிலையில் நேற்று அதிகாலை வெள்ளமதகு பகுதியில் காவல் ஆய்வாளர் ராஜா தலைமையில் சிறப்பு காவல் படை மற்றும் காவலர்கள் திடீர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக அதிகாலை 5 மணி முதல் 7 மணி வரை அடுத்தடுத்து வந்த லாரிகளை போலீசார் மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அதில் அந்த லாரிகளில் கொள்ளிடம் ஆற்றின் சவுடு மணல் இருந்ததும், இவைகள் அனைத்தும் சட்டத்துக்கு புறம்பாக ஆற்றில் இருந்து அனுமதியின்றி கடத்தி வந்ததும் ஓட்டுநர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.

இதையடுத்து லாரி ஓட்டுநர்களான வடலூர் பகுதிகளை சேர்ந்த செல்வராஜ் (42), சங்கர் (45), வேல்முருகன் (38), பண்ருட்டியை சேர்ந்த தனசேகர் (48) மற்றும் கரூர் பகுதியில் வசித்து வந்த ஆனந்தன் (42) ஆகியோரை கைது செய்த போலீசார், மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரிகளை பறிமுதல் செய்து வழக்குப்பதிந்து அந்த லாரிகளின் உரிமையாளர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் தமிழக அரசின் கீழ் சாலை பணிகள் மற்றும் கட்டுமான பணிகளை ஒப்பந்தத்தின் பேரில் செய்து வரும் நபர்கள் மத்தியில் காவல்துறையினரின் இந்த நடவடிக்கை பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Saud sand ,river ,Colliad ,
× RELATED ஸ்ரீநகர் பகுதியில் ஜீலம் ஆற்றில்...