×

இயந்திரம் தட்டுப்பாட்டால் 30 சதவீத அறுவடை மட்டுமே நடந்துள்ளது

கொள்ளிடம்,பிப்.7: கொள்ளிடம் பகுதியில் அறுவடை இயந்திரம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் 30 சதவீத அறுவடைப்பணி நடந்துள்ளது. இன்னும் 70 சதவீதம் நடக்க வேண்டும் என விவசாயிகள் கவலையில் உள்ளனர்.நாகை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் சுமார் 13 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் விவசாயிகள் சம்பா நெற்பயிர் சாகுபடி செய்துள்ளனர். இந்த நெற்பயிர் தற்பொழுது அறுவடைக்கு தயாராக உள்ளதால், அறுவடை செய்வதில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். அறுவடை பணிக்கு ஆள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் அறுவடை செய்ய போதிய ஆட்கள் கிடைக்கவில்லை. அனைத்து வயல்களிலும் பயிர் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளதால், விவசாயிகள் ஒரே நேரத்தில் அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். திடீரென மழை பெய்து விட்டால் அறுவடை பணி பாதிக்கப்படுவதுடன் அதிக சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை கருத்தில் கொண்டு அறுவடை பணியை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் அறுவடை இயந்திரம் தட்டுப்பாடாக இருப்பதால் இதுவரை கொள்ளிடம் வட்டாரத்திலேயே 30 சதவீத அறுவடை மட்டுமே நிறைவு பெற்றுள்ளது. மீதமுள்ள 70 சதவீதம் இன்னும் அறுவடை செய்ய வேண்டியுள்ளதாக உள்ளது. இது குறித்து விவசாயிகள் கூட்டமைப்பு தலைவர் சிவப்பிரகாசம்பிள்ளை கூறுகையில், நாகை மாவட்டத்திற்கு வேளாண்பொறியியல் துறை சார்பில் 11 அறுவடை இயந்திரங்கள் வாடகைக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் இரண்டு இயந்திரங்கள் பழுதடைந்துள்ள நிலையில் மீதம் 9 இயந்திரங்கள் மட்டுமே தற்பொழுது செயல்பட்டு வருகின்றன. கொள்ளிடம் மற்றும் சீர்காழி ஆகிய இரண்டு ஒன்றியங்களுக்கும் ஒரு இயந்திரம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதனால் தனியாரிடமிருந்து விவசாயிகள் அதிக வாடகை கொடுத்து அறுவடை இயந்திரம் பெற்று பயன்பெற்று வருகின்றனர். தனியாரிடமிருந்தும் போதிய இயந்திரம் கிடைக்கவில்லை. இதனால் இயந்திரம் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் நலன் கருதி வேளாண் பொறியியல் துறை சார்பில் அதிக எண்ணிக்கையில் அறுவடை இயந்திரம் கொள்ளிடம் பகுதியில் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


Tags : machine shortages ,
× RELATED கூலி ஆட்கள், இயந்திரம்...