×

செங்குன்றம் பகுதியில் மாட்டுதொழுவமாக மாறிய சாலைகள் : விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

புழல்: செங்குன்றம், திருவள்ளூர் கூட்டு சாலை, ஆலமரம் பகுதி, அன்னை இந்திரா நகர், காந்திநகர், பம்மதுகுளம், பெருமாள் அடிபாதம், எடப்பாளையம், அலமாதி வரை செல்லும் திருவள்ளூர் நெடுஞ்சாலையில் சமீப காலமாக சாலையின் இருபுறமும் மாடுகள் அதிகளவில் சுற்றித் திரிகின்றன. இதேபோல், செங்குன்றம் - திருவள்ளூர் கூட்டு சாலை, நேதாஜி சிலையிலிருந்து ஜி.என்.டி சாலை செங்குன்றம் பேருந்து நிலையம், நெல் மண்டி, மார்க்கெட், புழல் ஏரி உபநீர் கால்வாய், பாலம், சாமியார் மடம் வரை சாலையின் இருபுறமும் மாடுகள் சுற்றித்திரிகின்றன. அதுமட்டுமின்றி, இரவில் சாலையிலேயே படுத்து உறங்குகின்றன. இதனால் இந்த இரண்டு சாலைகளிலும் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்து பீதியில் செல்கின்றனர். இந்த மாடுகள் திடீரென சாலையின் குறுக்கே ஓடுவதால், அதன்மீது மோதி அடிக்கடி விபத்து ஏற்பட்டு, உயிர் சேதமும் நடைபெறுகின்றன. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட செங்குன்றம் பேரூராட்சி, பாடியநல்லூர், நல்லூர், அலமாதி ஆகிய ஊராட்சியைச் சேர்ந்த அதிகாரிகள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், மாநில நெடுஞ்சாலை துறையினர் ஆகியோர் உரிய நடவடிக்கை எடுத்து,  சாலைகளில்   சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து, அதன் உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், ‘‘திருவள்ளூர் நெடுஞ்சாலை மற்றும் செங்குன்றம் ஜி.என்.டி சாலை ஆகியவற்றில் ஏராளமான மாடுகள் சுற்றித் திரிவதுடன் சாலையிலேயே உறங்குகின்றன. இதனால் சாலையில் செல்லும்போது மாடுகள் மீது மோதி விபத்துகள் ஏற்படுகிறது. வாகனங்கள் ஒலி எழுப்பும்போது மாடுகள் மிரண்டு சாலையின் குறுக்கும் நெடுக்குமாக ஓடுவதால், அதன் மீது வாகனங்கள் மோதி அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதுகுறித்து மாநில நெடுஞ்சாலை துறை அலுவலகம் மற்றும் சம்பந்தப்பட்ட செங்குன்றம் பேரூராட்சி, பாடியநல்லூர், நல்லூர், அலமாதி ஆகிய ஊராட்சி அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் நடவடிக்கையும் இல்லை. எனவே இதில் யாராவது ஒரு பிரிவினர் முன் வந்து சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை சிறைபிடித்து சம்பந்தப்பட்ட மாட்டு உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நெடுஞ்சாலைகளில் பாதுகாப்பான பயணத்துக்கு வேண்டும்,’’ என்றனர்.

Tags : Roads ,Accident drivers ,
× RELATED சாலை விரிவாக்க பணிக்காக மரங்கள்...