×

பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் வருகையையொட்டி புதுப்பிக்கப்பட்ட 3 மாதத்தில் சேதமான சென்டர் மீடியன்

மாமல்லபுரம், பிப்.6: பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் வருகையொட்டி, மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில், புதுப்பிக்கப்பட்ட சென்டர் மீடியன், 3 மாதத்தில் சேதமடைந்துள்ளது. இதனை உடனே சீரமைக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மாமல்லபுரத்தில் சந்தித்தனர். அப்போது, இரு நாட்டு உறவுகள் குறித்து பேசினர். அவர்கள் புராதன சின்னங்களான வெண்ணெய் உருண்டை பாறை, அர்ச்சுணன் தபசு, ஐந்து ரதம், கடற்கரை கோயில் ஆகிய இடங்களை சுற்றிப் பார்த்தனர். குறிப்பாக வெண்ணெய் உருண்டை பாறை முன் நின்று இரு நாட்டு தலைவர்களும் கை குலுக்கும் காட்சி, பல்வேறு பத்திரிகைகள், ஊடகங்களில் வெளியானது. இரு நாட்டு தலைவர்கள் மாமல்லபுரம் வருகையொட்டி கிழக்கு கடற்கரை சாலையில் புதிதாக சென்டர் மீடியன் அமைக்கப்பட்டு, மரக்கன்றுகள் வைத்து பூங்கா அமைக்கப்பட்டது. சென்டர் மீடியன் இருபுறமும் பெயின்ட் அடித்து புதுப்பொலிவுடன் காணப்பட்டது. கிழக்கு கடற்கரை சாலையில் இருபுறம் உள்ள மின் கம்பங்கள் மற்றும் மின்மாற்றிகள் அனைத்தும் புதுப்பிக்கப்பட்டன.

மேலும், மாமல்லபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அனைத்து சாலைகளும் சீர் செய்யப்பட்டு புதிதாக தார்சாலைகள் அமைக்கப்பட்டன. மின்கம்பங்களில் விதவிதமான மின் விளக்குகள் பொறுத்தப்பட்டன. புராதன சின்னங்கள் மீதும் புதிதாக மின் விளக்குகள் பொறுத்தப்பட்டு மின்விளக்கு அலங்காரத்தில் மாமல்லபுரம் நகரமே ஜொலித்தது. புராதன சின்னங்கள் அனைத்தும் ரசாயனம் கொண்டு இரவு, பகல் பாராமல் சுத்தம் செய்யப்பட்டது. கடற்கரை கோயில் அருகே கிரானைட் கற்கள் பதிக்கப்பட்டு அழகுர காணப்பட்டது. இரு நாட்டு தலைவர்கள் வந்து சென்ற பிறகு மாமல்லபுரத்துக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் பஸ், வேன், கார் உள்பட பல்வேறு வாகனங்களில் வந்து புராதன சின்னங்களை கண்டு ரசித்து, அவற்றின் முன் நின்று செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்து செல்கின்றனர்.

இந்நிலையில், இரு நாட்டு தலைவர்கள் வந்து சென்ற 3 மாதங்களிலேயே கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து மாமல்லபுரம் நகருக்குள் நுழையும் பகுதியில் அமைக்கப்பட்ட சென்டர் மீடியன் உடைந்து சேதமடைந்துள்ளது. இதனை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள் உடனடியாக நேரில் வந்து பார்வையிட்டு சேதமடைந்துள்ள சென்டர் மீடியனை சரி செய்ய வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

Tags : Modi ,President ,China ,Jinping ,
× RELATED சொல்லிட்டாங்க…