×

ஏகனாம்பேட்டை, நாயக்கன்பேட்டை அரசு பள்ளி அருகே மாணவ, மாணவிகள் சாலையை கடக்க முடியாமல் சிரமம்: போலீசார் பாதுகாப்பு பணியில் இல்லாததால் விபத்து அபாயம்

வாலாஜாபாத், பிப்.6: வாலாஜாபாத்தில் இருந்து காஞ்சிபுரம் வரை செல்லும் சாலையை ஒட்டி முத்தியால்பேட்டை, அய்யம்பேட்டை, திம்மராஜாம்பேட்டை, கருக்குபேட்டை, ஏகனாம்பேட்டை, புதுப்பேட்டை, நாயக்கன்பேட்டை, கீழ் ஒட்டிவாக்கம், பூசிவாக்கம் உள்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் உள்ள மக்கள் வாலாஜாபாத், காஞ்சிபுரம் உள்பட பல்வேறு நகர்ப்புற பகுதிகளுக்கு செல்ல கருக்குபேட்டை பஸ் நிறுத்தம் வந்து, அங்கிருந்து அரசு மற்றும் தனியார் பஸ்கள் மூலம் சென்று வருகின்றனர். இது ஒருபுறமிருக்க ஏகனாம்பேட்டையில் செயல்பட்டும் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த  800க்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கின்றனர். இந்த மாணவிகள் பெரும்பாலானோர் நடந்து செல்பவர்களும், சைக்கிள்களிலும் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். ஆனால், பள்ளிக்கு செல்லும்போது, பள்ளி முடிந்து வீட்டுக்கு புறப்படும்போதும், மாணவிகள் காஞ்சிபுரத்தில் இருந்து வாலாஜாபாத் செல்லும் சாலையை கடக்க கடும் சிரமப்படுகின்றனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘வாலாஜாபாத் ஒன்றியம் ஏகனாம்பேட்டை, நாயக்கன்பேட்டை ஆகிய கிராமங்களில் அரசு மேல்நிலைப் பள்ளிகள் செயல்படுகின்றன. இதில், 1,500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இந்த மாணவ, மாணவிகள் சாலையைக் கடப்பதற்கு பெரும் சிரமம் அடைகின்றனர். ஒரு சில நேரங்களில் வாகனங்கள் வருவதை கண்டுகொள்ளாமல் சாலையை கடக்கும்போது, விபத்துக்கள் ஏற்பட்டு படுகாயமடைகின்றனர்.
இந்த பள்ளியின் அருகே, வாலாஜாபாத் போலீசார், பள்ளி துவங்கும் நேரும், வீட்டுக்கு புறப்படும் நேரங்களில் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டால், மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. மேலும் போலீசார் பாதுகாப்பு பணியில் இருப்பதால், இப்பகுதியில் வாகன ஓட்டிகளும் கட்டுப்பாட்டுன் சென்று வருவார்கள். எனவே, மேற்கண்ட பகுதியில் போலீசாரை நியமித்து, போக்குவரத்தை ஒழுங்கு செய்து மாணவ, மாணவிகள் பாதுகாப்பாக சாலையை கடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : Ekanampettai ,road ,Nayakanpet Government School ,
× RELATED சீத்தஞ்சேரி கூட்டுச் சாலையில்...