×

பணி முடிந்து நண்பருடன் பைக்கில் சென்றபோது பெண்ணுக்கு பாலியல் தொல்லை கமாண்டோ வீரருக்கு அடி, உதை: வடபழனியில் பரபரப்பு


சென்னை, பிப். 6: ஆண் நண்பருடன் பைக்கில் சென்ற இளம்பெண்ணுக்கு தொல்லை கொடுத்த கமாண்டோ படை வீரருக்கு சரமாரியாக அடி,உதை விழுந்தது. இச்சம்பவத்தால் சிறிதுநேரம் வடபழனியில் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை சாலிகிராமத்தை சேர்ந்தவர் 26 வயது பெண். கிண்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளராக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து இளம்பெண் தனது ஆண் நண்பருடன் பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அசோக்பில்லர் அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் பைக்கில் வந்த மர்ம நபர் இளம்பெண்ணின் அருகில் வந்து தொல்லை கொடுத்துள்ளார். இதை சற்றும் எதிர்பார்க்காத அவர் அதிர்ச்சியடைந்து சத்தம் போட்டுள்ளார்.

மேலும், பைக்கில் தப்பி சென்ற அந்த நபரை விடாமல் தனது ஆண் நண்பருடன் துரத்தி சென்றார். எம்எம்டிஏ காலனி அருகே உள்ள சிக்னல் வந்தபோது அவரது பைக் மீது மோதி கீழே தள்ளி பொதுமக்கள் உதவியுடன் அந்த நபரை மடக்கி பிடித்து சரமாரியாக தாக்கினர். தகவலறிந்து வடபழனி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் இருந்து அந்த நபரை மீட்டனர். பின்னர் இளம்பெண் தன்னை பாலியல் ரீதியில் சீண்டியதாக வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

விசாரணையில், ராஜா அண்ணாமலைபுரம் ‘மருதம்’ வளாகத்தில் உள்ள கமாண்டோ தலைமை அலுவலகத்தில் பணியாற்றி வரும் கமாண்டோ வீரர் முரளி கிருஷ்ணன் என தெரியவந்தது. குடிபோதையில் இருந்ததால் தவறுதலாக பெண்ணை சீண்டியதாக தெரிவித்தார். அதை தொடர்ந்து போலீசார் கமாண்டோ வீரர் முரளி கிருஷணனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து கமாண்டோ பிரிவு உயர் அதிகாரிகளும் முரளி கிருஷ்ணனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் சிறிது நேரம் வடபழனியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Commando player ,
× RELATED இடி தாக்கி பெண் விவசாயி பலி