×

பாதாள சாக்கடை அடைப்பால் கழிவுநீர் வெளியேறி சுகாதார கேடு

தஞ்சை, பிப்.6: தஞ்சையில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் கழிவு நீர் வெளியேறி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மானம்புச்சாவடி சிவராயத் தோட்டம் 3ம் தெருவின் கடைசியில் பாதாள சாக்கடையில் கடந்த ஒரு மாதமாக அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சாலையில் கழிவு நீர் வழிந்தோடி வருகிறது. சாலையில் போவோர் வருவோர் இக்கழிவு நீரை தாண்டி தான் செல்ல வேண்டியுள்ளது. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் சுகாதார சீர்கேட்டையும் ஏற்படுத்தி வருகிறது. ஈக்கள், கொசு உள்ளிட்ட நோயை பரப்பும் ஜந்துக்கள் இக்கழிவுநீர் மூலம் இனப்பெருக்கம் செய்வதால் இப்பகுதியில் தொற்று நோய் பரவும் அபாயம் எழுந்துள்ளது. குறிப்பாக இதன் அருகிலேயே 5ம் வகுப்பு வரை உள்ள பள்ளி இயங்கி வருகிறது. இங்கு படிக்கும் குழந்தைகளுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் எழுந்துள்ளது.

இது குறித்து இப்பகுதிவாசிகள் மாநகராட்சியில் பல முறை புகார் கூறியும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. துப்புரவு ஊழியர்கள் அவ்வபோது வந்து கழிவு நீர் சாலையில் செல்வதை பார்த்து செல்வதுடன் நிறுத்திக் கொள்கின்றனர். கழிவு நீர் வெளியேறாத வகையில் யாரும் இந்த அடைப்பை சீர்செய்ய எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் பாதாள சாக்டையில் ஏற்பட்டுள்ள இந்த அடைப்பை சரி செய்ய உரிய நடவடிக்கை மேற்கொண்டு சுகாதார சீர்கேட்டை களைய முன் வர வேண்டும் என இப்பகுதிவாசிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags :
× RELATED இன்று குருபெயர்ச்சி: திட்டை...