×

நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் கல்லணை கால்வாய் பிரிவு வாய்க்கால், ஏரிகள் புனரமைப்பு பணியை விரைந்து முடிக்க வேண்டும்

பட்டுக்கோட்டை, பிப்.6: கல்லணையில் கால்வாய் பிரிவு வாய்க்கால், ஏரிகளை புனரமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கல்லணை கால்வாய் பாசன விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
கல்லணை கால்வாய் பாசன விவசாயிகள் சார்பில் நசுவினி படுக்கை அணை விவசாயிகள் மேம்பாட்டு சங்கத்தலைவர் பொன்னவராயன்கோட்டை விவசாயி வீரசேனன் சமீபத்தில் பட்டுக்கோட்டைக்கு வந்திருந்த தமிழ்நாடு நீர்வள பாதுகாப்பு மற்றும் ஆறுகள் மறுசீரமைப்பு கழக தலைவரும், நிர்வாக இயக்குனருமான ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சத்தியகோபாலிடம் நேரில் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: காவேரி மேம்பாட்டு திட்டத்தின் ஒரு பகுதியாக 1925 - 1935 ம் வருடங்களில் நிர்மாணிக்கப்பட்ட மூலம் 2.27 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. இதன் மொத்த நீளம் 148.76 கிலோ மீட்டர் ஆகும். இத்திட்டத்தை கல்லணை கால்வாய் பாசன திட்டம் (G.A கேனல் ) என்று அழைக்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 10க்கும் அதிகமான வருவாய் வட்டங்களை சேர்ந்த விவசாய நிலங்களும், 694 முறைசார் ஏரிகள் மூலம் 82,000 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகிறது.

கல்லணை கால்வாய் திட்டம் செயல்பாட்டிற்கு வந்து 85 ஆண்டுகள் முடிவுற்ற நிலையில் கல்லணை கால்வாயின் கரைகள் மிகவும் பலவீனமடைந்து இருப்பதாலும், படுக்கையில் மண் மேடிட்டு இருப்பதாலும், அதன் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள கட்டிடங்கள் மற்றும் மதகுகள் அதன் ஆயுட்காலம் முடிந்து பழுதடைந்துள்ளதாலும் முழு கொள்ளளவு தண்ணீர் எடுக்க இயலாமல் கடைமடைக்கு தண்ணீர் கொடுப்பதில மிகவும் கஷ்டங்கள் ஏற்படுகின்றது. இதனால் கடைமடை விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆண்டுதோறும் லட்சக்கணக்காண டிஎம்சி தண்ணீர் கடலில் வீணாக கலக்கும் நிலையில் கல்லணை கால்வாய் பாசன விவசாயிகள் ஒரு போக நெல் சாகுபடிக்கும் , குடி தண்ணீருக்கும் அல்லல்படும் நிலையில் உள்ளோம். எனவே தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் அவர்கள் கல்லணை கால்வாயின் ஏ , பி, சி, டி பிரிவு வாய்க்கால்களையும், ஏரிகளையும் புனரமைப்பு செய்யும் பணியை விரைந்து செய்து முடித்திட அரசுக்கு பரிந்துரை செய்யுமாறு கல்லணை கால்வாய் பாசன விவசாயிகள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Tags :
× RELATED பாபநாசம் அருகே ஊர் பொதுக்குளத்தில் செத்து மிதந்த மீன்கள்