×

கும்பகோணம் பகுதியில் சம்பா அறுவடைப்பணி மும்முரம்

கும்பகோணம், பிப்.6: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மற்றும் சுற்றுப்பகுதியில் சம்பா அறுவடைப்பணி மும்முரம் நடைபெற்று வருகிறது. பனியினால் சம்பா தாளடி பயிர்கள் நாசமாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்ட சம்பா தாளடி நெற்பயிர்கள் சுமார் 3 லட்சம் ஏக்கரில் நடவு செய்துள்ளனர். விவசாயிகள் நவம்பர் மாதம் இறுதியில் நடவு செய்து தற்போது அறுவடை பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றது. ஆறுகள், வாய்க்கால்களில் தண்ணீர் இருந்ததாலும், வாய்க்கால்களில் துார்வாராமல், காட்டாமணக்கு ,கோரைகள் மண்டியதால் தண்ணீர் வயலுக்கு பாயாமல் வீணானது. இதனால் பெரும்பாலான விவசாயிகள் மின் மோட்டாரில் சாகுபடி செய்தனர். இந்நிலையில் நடவு செய்த சம்பா தாளடிபயிர்கள் அறுவடை பருவத்தில், கதிர்கள் முற்றியிருப்பதால், கும்பகோணத்தை அடுத்த மெலட்டூர், திருக்கருக்காவூர், ஆவூர், பட்டீஸ்வரம் , சுவாமிமலை உள்ளிட்ட பகுதிகளில் அறுவடை பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் தஞ்சை மாவட்டத்தில் சுமார் 25 சதவீதம் அறுவடைப்பணிகள் முடிந்த நிலையில் உள்ளது. மேலும் அறுவடைக்கு விவசாய தொழிலாளர்கள் இல்லாததால், சேலம், நாமக்கல் ஆகிய பகுதிகளிலிருந்து நெல் அறுவடை செய்யும் இயந்திரம்,போதுமானதாக கொண்டு வராததால், அறுவடைஇயந்திரம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான நெற்கதிர்கள் அறுவடைக்காக காத்திருக்கின்றன.

இது குறித்து விவசாயி சாமிநாதன் கூறுகையில்,
சம்பா சாகுபடிக்கு போதிய தண்ணீர் வராததால் ஏக்கருக்கு 15 மூட்டைகள் விளைச்சலாகியுள்ளது. கடந்த சம்பா பருவத்தில் ஏக்கருக்கு 40 மூட்டைகள் வரை வந்தது . சம்பா நடவு செய்த வயலில் அறுவடைக்காக இருப்பதால், பனியினால் செலவு செய்த தொகை கிடைக்குமா என்பது கேள்வி குறியாகியுள்ளது. மேலும் வங்கியில் சரி வர கடன் வழங்காததால், கந்து வட்டிக்கும், மீட்டர் வட்டிக்கும் பணத்தை வாங்கி சம்பா சாகுபடி செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தாளடி சாகுபடியில் கதிர்களில், கும்பகோணம் மற்றும் சுற்றுப்பகுதியில் கடந்த சில நாட்களாக கடும் பனியினால் சாகுபடி செய்துள்ள கதிர்களில் உள்ள நெல்மணிகள் ஈரமாகி விலை போவது சிரமம் ஏற்படும். மேலும் அறுவடை இயந்திரம் தட்டுப்பாட்டால், அறுவடை நடைபெறுமா என்பது கேள்வி குறியாகியுள்ளது என்றார்.

Tags : Kumbakonam ,area ,
× RELATED கும்பகோணத்தில் இறந்த நிலையில்...