×

பொன்னமராவதி மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்

பொன்னமராவதி, பிப். 6: பொன்னமராவதியில் ஊராட்சி தலைவர்கள் அறிமுக ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குனர் பாலமுரளி தலைமை வகித்தார். ஒன்றியக்குழு தலைவர் சுதா அடைக்கலமணி முன்னிலை வகித்தார். இதில் சேரனூர், கீழத்தானியம், நல்லூர், நெறிஞ்சிக்குடி, வாழைக்குறிச்சி, கூடலூர் பகுதியில் அதிகளவு மணல் திருட்டு நடப்பதால் பொன்னமராவதி ஒன்றியத்தில் உள்ள சாலைகள் அதிகளவு சேதமடைகிறது. புதிய ஊராட்சி தலைவர்கள் ஆற்ற வேண்டிய பணிகள், ஊராட்சிகளில் உள்ள குடிநீர் இணைப்புகளை முறைப்படுத்த வேண்டும். தெருவிளக்கு, குடிநீர் தடையின்றி வழங்க நிதி வழங்க வேண்டும்.

காரையூர் காவல் நிலையத்தை இலுப்பூர் கோட்டத்துடன் இணைத்ததை ரத்து செய்து மீண்டும் பொன்னமராவதி உட்கோட்டதுடன் இணைக்க வேண்டும். தெரு விளக்குகள், எல்இடி பல்புகள் பொறுத்திய ஒப்பந்தகாரர்களிடம் உடனடியாக பழுதான தெருவிளக்குகளை பார்க்க செய்ய வேண்டும். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஊராட்சி தலைவர், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் விதமாக அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று ஊராட்சி தலைவர்கள் வலியுறுத்தினர்.
இதைதொடர்ந்து ஊராட்சி உதவி இயக்குனர் பாலமுரளி பேசுகையில், ஊராட்சி தலைவர்கள் அரசு ஆணைப்படி குடிநீர் மோட்டார் செலவினம் செய்ய வேண்டும். கூடுதல் செலவினங்களை முறையாக பொறியாளர்களின் அனுமதி பெற்று செய்ய வேண்டும். ஊராட்சியின் முதல் கணக்கு பழைய நடைமுறையே தான் உள்ளது. இதில் எப்எம்எஸ் என்ற முறையில் அது பராமரிக்கப்படும். இதனால் ஊராட்சியில் செலவினங்கள் மேற்கொள்வதில் எவ்வித சிரமமும் இல்லை. ஒன்றிய அலுவலர்கள் மூலம் ஊராட்சிகளில் முறையற்ற முறையில் குடிநீர் இணைப்பு பெற்று இருந்தால் நடவடிக்கை எடுக்கலாம்.

ஊராட்சிக்கு அரசிடமிருந்து வர வேண்டிய நிதிகள் படிப்படியாக வரும். இதன்மூலம் ஊராட்சியின் தேவைகளை நிறைவேற்றலாம். துப்புரவு பணியாளர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கு சம்பளம் மற்றும் அரியர் போன்றவைகளை நிதி வந்ததும் வழங்க முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றார். ஒன்றியக்குழு துணைத்தலைவர் தனலட்சுமி அழகப்பன், ஊராட்சி தலைவர்கள் காமராஜ், முருகேசன், கிரிதரன், பழனியாண்டி, செல்வமணி, இக்பால், மதியரசன், ராமாயி, அழகு, மேகலா, கீதா, செல்வி, குமார், சுமதி, சந்திரா,மேகலா, தங்கமணி, ரேவதி, சங்கீதா, மாரிக்கண்ணு, சோலையம்மாள் பங்கேற்றனர். முன்னதாக ஒன்றிய ஆணையர் வேலு வரவேற்றார். கிராம ஊராட்சி ஆணையர் சாமிநாதன் நன்றி கூறினார்.

Tags :
× RELATED கந்தர்வகோட்டை அருகே கிணற்றில் தவித்த...