×

அறுவடை செய்த நெல்லை காயவைக்க உலர் கலன்கள் விரைவில் அமைக்க வேண்டும்

நாகை,பிப்.6: நாகை மாவட்டத்தில் அறுவடை செய்த நெல் உள்ளிட்ட பயிர்களை காயவைக்க உலர்கலன்களை அரசு ஏற்படுத்தி தர வேண்டும் என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர். காவிரி டெல்டா மாவட்டமான தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் மூன்று போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டது. காலபோக்கில் தண்ணீர் பற்றாக்குறையாலும் பாசனத்திற்கு உரிய காலத்தில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடாமல் போனதாலும் மூன்று போக சாகுபடி ஒரு போக சாகுபடியாக மாறியது. இயற்கையின் சதியால் நாகை மாவட்டங்களில் ஒரு போக சாகுபடியே கேள்விக்குறியானது. இந்நிலையில் நடப்பு ஆண்டில் ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் பல்வேறு தடைகளை தாண்டி கடை மடைப்பகுதியான நாகைக்கு வந்தது. இதைதொடர்ந்து நாகை விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு மற்றும் நாற்றங்கால் மூலம் சம்பா சாகுபடி பணியில் மும்முரமாக ஈடுபட்டனர். நாகை மாவட்டத்தில் சம்பா மற்றும் தாளடி 1 லட்சத்து 25 ஆயிரத்து 800 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டது.

இதில் 1 லட்சத்து 32 ஆயிரத்து 55 ஹெக்டேர் பரப்பளவில் அறுவடை நடந்துள்ளது. அதே போல் நெல் மற்றும் பயறு வகை பயிர்கள் 2 லட்சத்து 53 ஆயிரத்து 800 ஹெக்டேர் பரப்பளவில் மேற்கொள்ள இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் 90 சதவீதம் அறுவடை பணிகள் நடந்துள்ளது. நாகை அருகே பாலையூர், பெருங்கடம்பனூர், ஆழியூர், கீழ்வேளூர், வேளாங்கண்ணி, தெற்குப்பொய்கைநல்லூர், பூவைத்தேடி, திருமணங்குடி, தேமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் குலை நோய், ஆணைக் கொம்பன், புகையான் ஆகிய நோய்கள் அதிகளவில் தாக்கி விவசாயிகளை பாதிப்படைய செய்தது. மேலும் தொண்டை கதிர், பால் கட்டும் பருவத்தில் இருந்த பயிர்களில் எலிகள் புகுந்து நெற்பயிர்களை எலிகள் கடித்து வெட்டி நாசம் செய்து. ஒரு சில இடங்களில் பன்றிகள் வயல்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்தது. இதனால் 20 சதவீதத்திற்கு மேல் மகசூல் விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. இந்தநிலையில் அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் பனிப்பொழிவும் அதிகரித்துள்ளது.

இவ்வாறு இயற்கை இடர்பாடுகளுக்கு மத்தியில் நாகை, பாலையூர், பெருங்கம்பனூர், வேளாங்கண்ணி, கீழ்வேளுர், திருமருகல், தேமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் சம்பா நெல் அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. விவசாயத் தொழிலாளர்கள் பற்றாக்குறை, அறுவடை இயந்திரங்கள் தட்டுப்பாடு, நிர்ணயிக்கப்பட்ட வாடகையை விட கூடுதலாக தொகை கோரும் அறுவடை இயந்திரங்கள் என அறுவடை சார்ந்த பிரச்னைகள் பரவலாக நாகை மாவட்டத்தில் உள்ளது. இவை எல்லாவற்றையும் விட மிக முக்கிய பிரச்னையாக நெல்லின் ஈரப்பதம் ஆகும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்லில் 17 சதவீத ஈரப்பதம் மட்டுமே அனுமதிக்கப்படும். ஆனால் கடுமையான பனி பொழிவின் காரணமாகவும் நெல்லின் ஈரப்பதம் உயர்ந்தே காணப்படுகிறது. இதனால் விவசாயிகள் தங்கள் நெல்லை கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய முடியாத நிலையில் அவதி அடைகின்றனர்.

எனவே அறுவடை செய்த நெல்லை காய வைக்க போதிய இட வசதி இல்லாமல் சாலைகளில் கொட்டி காய வைத்து வருகின்றனர். காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சையில் நெல் உள்ளிட்ட பயிர்களை காய வைக்க அரசின் சார்பில் உலர்கலன்கள் அமைத்துள்ளனர். அதே போல் காவிரியின் கடை மாவட்டமான நாகை மாவட்டத்தில் உலர்கலன் அமைத்து தர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். உலர்கலன்கள் இல்லாத காரணத்தால் விவசாயிகள் அறுவடை செய்த நெல் மற்றும் பயறு வகை பயிர்களை சாலைகளில் கொட்டி காய வைக்க வேண்டிய அவலம் உள்ளது. ஏற்கனவே பல இயற்கை இடர்பாடுகளால் நஷ்டத்தை சந்தித்து வரும் விவசாயிகள் சாலைகளில் நெல்லை கொட்டி காய வைப்பதால் அந்த வழியாக செல்லும் வாகனங்களால் மேலும் நஷ்டம் ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர். சாலைகளில் நெல்லை கொட்டி காயவைக்கும் போது சில நேரங்களில் திடீரென மழை பெய்தால் ஈரபதம் அளவு மேலும் அதிகரித்துவிடுகிறது. அதை அப்படியே மூட்டையாக கட்டி வைத்தால் முளைத்து விடுவதாகவும் வேதனையுடன் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். எனவே விவசாயிகளுக்கு மேலும் நஷ்டம் ஏற்படாமல் இருக்க நாகை மாவட்டத்தில் உலர்கலன்களை அரசு ஏற்படுத்தி தர வேண்டும் என்று தெரிவிக்கின்றனர்.

Tags :
× RELATED ஆட்டம் பாட்டத்துடன் நடந்த அனல் பறக்கும் பிரசாரம் ஓய்ந்தது