×

கரூர் ராயனூர் பகுதியில் அடிப்படை வசதிகள் ஏதுமின்றி அவதிப்படுகிறோம்

கரூர், பிப்.6: கரூர் நகராட்சிக்குட்பட்ட ராயனூர் பகுதியில் உள்ள எம்ஜிஆர் நகர் முதல் தெரு சந்திப்பு பகுதியில் சாலை வசதி போன்ற அடிப்படை வசதிகள் உடனே செய்து தர வேண்டும் என இந்த பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
கரூர் நகராட்சியில் வளர்ந்து வரும் பகுதிகளில் ஒன்றாக தாந்தோணிமலையை அடுத்த ராயனூர் பகுதி உள்ளது. இந்த நகரை சுற்றிலும் ஏராளமான தொழில் நிறுவனங்கள் உள்ளன. ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. கரூரில் இருந்து திண்டுக்கல், திருச்சி பைபாஸ் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் ராயனூர் வழியாக செல்கின்றன. அந்த வகையில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் ராயனூரும் ஒன்று. ராயனூர் பகுதியை சுற்றிலும் உள்ள மண்சாலைகள், குண்டும் குழியுமான சாலைகள் தற்போது தார்ச்சாலையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. ஆனால், கடந்த பல ஆண்டுகளாகவே, ராயனூர் எம்ஜிஆர் நகர் முதல் தெரு மற்றும் இந்த சாலை சந்திக்கும் பகுதிகள் அனைத்தும் குண்டும் குழியுமாக மிகவும் மோசமான நிலையில் உள்ளன. இந்த சாலையை தரம் உயர்த்தி தார்ச்சாலையாக்க வேண்டும் என கோரிக்கையும் வைக்கப்பட்ட நிலையில், இந்த சாலைப்பகுதி மட்டும் கண்டும் காணாமல் விடப்பட்டுள்ளன.

மேலும், எம்ஜிஆர் நகர் இரண்டாவது தெருவின் நுழைவு வாயில் பகுதியோரம் குப்பைகள் கொட்டப்பட்டு உள்ளதால், பல்வேறு சுகாதார சீர்கேடுகளை பகுதி மக்கள் சந்தித்து வருகின்றனர். மேலும், எம்ஜிஆர் நகர் 2வது தெருவின் பின்புறம் விளைநிலத்தில் டாஸ்மாக் செயல்படுகிறது. அங்கு செல்வதற்கு முறையான வழி இருந்தும், குறுக்கு வழியில் குடிமகன் சென்று சரக்கு அடித்து விட்டு பாட்டில்களுடன் இதே வழியில் வந்து செல்வதாலும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, இதுபோன்ற பிரச்னைகளால் சிக்கித் தவித்து வரும் இந்த பகுதி மக்களின் நலன் கருதி தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து இந்த பகுதியினர் தெரிவித்துள்ளதாவது
சுப்ரமணியன்: கடந்த பல ஆண்டுகளாக இந்த பகுதியில் வசித்து வருகிறோம். ராயனூரை சுற்றிலும் உள்ள சாலைகள் அனைத்தும் தரம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், இந்த எம்ஜிஆர் முதல் தெரு சாலை மட்டும் இன்னும் தரம் உயர்த்தப்படவில்லை. இதனால், இரவு நேரங்களில் இரண்டு சக்கர வாகனங்களில் எளிதாக செல்ல முடியாத நிலை நிலவி வருகிறது. எனவே, மக்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக தார்ச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். கதிர்வேலு: எம்ஜிஆர் நகர் முதல் தெரு சாலைதான் மோசமான நிலையில் உள்ளது என்றால், பல தெரு விளக்குகள் எரியாமல் உள்ளது. இதுகுறித்து இந்த பகுதியினர் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. இதனால், இரவு நேரங்களில் பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருகிறோம்.

எனவே, தெரு விளக்கு வசதி போன்ற பல்வேறு அடிப்படை வசதிகள் நிர்வாகத்தினர் பார்வையிட்டு மேற்கொள்ள வேண்டும் என்றார். சுமதி: ராயனூர் பின்புறம் உள்ள இந்த பகுதி தற்போது வளர்ந்து வரும் பகுதியாக உள்ளது. ஆனால், அதற்கேற்ற வகையில் அடிப்படை வசதிகள் குறைவாக உள்ளன. தெருவின் முனையில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனை கொட்ட குப்பை தொட்டி வைக்க வேண்டும். அப்போதுதான் குப்பைகள் சிதறாமல் இருக்கும். மேலும், சாலைகளும் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. எனவே, எங்களின் கோரிக்கையை கவனத்தில் கொண்டு தேவையான வசதிகள் செய்து தர வேண்டும் என்றார்.

நல்லசாமி: எம்ஜிஆர் நகர் முதல் தெரு மற்றும் இரண்டாவது தெருக்களில் சாக்கடை வடிகால் போன்றவையும் சிறப்பானதாக இல்லை. அடிக்கடி தேக்கம் ஏற்படுகிறது. இரண்டு சாலைகளும், வெங்கடேஷ்வரா சாலையும் சந்திக்கும் இடமும் சீரமைக்கப்படாமல் மேடு பள்ளமுமாகவே உள்ளது. நான்கு சக்கர வாகன ஓட்டிகள் முதல் அனைத்து வாகன ஓட்டிகளும் இந்த சந்திப்பு சாலையை கடந்து செல்ல சிரமப்படுகின்றனர். எனவே, இந்த பிரச்னைகளை உடனடியாக களைய தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என்றார்.

ஆனந்தி: தற்போது மழைக்காலம் இல்லை என்பதால் பிரச்னையில்லை. கடந்த சில ஆண்டுகளாக மழைக்காலங்களில் இந்த பகுதியினர் அனைவரும் சந்திப்பு சாலை மற்றும் எம்ஜிஆர் நகர் முதல் தெருச்சாலைகளில் நடந்தே செல்ல முடியாத நிலை நிலவியது. சிலர், சந்திப்பு சாலையில் வரும் போதே தவறி விழுந்தும் சென்றுள்ளனர். எனவே, இதுபோன்ற பிரச்னைகளில் இருந்து இந்த பகுதியினர்களும், கடந்து செல்பவர்களும் விடுபட தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்பதே எங்களின் எதிர்பார்ப்பாக உள்ளது என்றார்.

கவிதா: முறையான சாக்கடை வடிகால்கள் இந்த பகுதியில் இல்லை. சாலைகளும் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. இதனால், அவசரத் தேவைகளுக்கு இரண்டு சக்கர வாகனங்களில் செல்லவும் சிரமப்பட்டு வருகிறோம். மற்ற பகுதிகளில் சாலைகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. ஆனால், எங்கள் பகுதிச் சாலைகள் மோசமான நிலையில்தான் உள்ளன. எனவே, பகுதி மக்கள் நலன் கருதி சாலையை தரம் உயர்த்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
ரம்யா: தாந்தோணிமலை, மில்கேட், சுங்ககேட் போன்ற முக்கிய பகுதிகளுக்கு ராயனூர் பகுதியில் இருந்து செல்லும் அனைத்து தரப்பினர்களும் எம்ஜிஆர் நகர் சாலைகள் வழியாகத்தான் சென்று வருகின்றனர். தொடர் போக்குவரத்து காரணமாக, சாலைகள் சிதிலடைந்து எளிதாக நடந்து செல்ல முடியாத நிலையில், வாகனங்கள் எப்படி சீராக செல்ல முடியும். இது குறித்து பலமுறை அதிகாரிகளின் கவனத்துக்கும் எடுத்துச் சென்று பணிகள் மேற்கொள்ளப்படாமல் உள்ளன. எனவே, எங்களின் அடிப்படை தேவைகளில் ஒன்றாக இந்த சாலை வசதியை அதிகாரிகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்றார்.

Tags : area ,Karur Rayanur ,
× RELATED புறநகர் பகுதி கட்டுமான பணிகளில்...